/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் உற்பத்தியை முடக்கிய வெள்ளை ஈ! கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
/
இளநீர் உற்பத்தியை முடக்கிய வெள்ளை ஈ! கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
இளநீர் உற்பத்தியை முடக்கிய வெள்ளை ஈ! கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
இளநீர் உற்பத்தியை முடக்கிய வெள்ளை ஈ! கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
ADDED : ஏப் 11, 2024 12:46 AM
உடுமலை : முக்கிய சீசனில், வெள்ளை ஈ தாக்குதலால், இளநீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், விவசாயமும், கால்நடை வளர்ப்பு தொழிலும் முக்கியமானவையாக உள்ளன. குறிப்பாக, உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுதோறும் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்து வந்தது.
சாகுபடி பணிகள், கொப்பரை உற்பத்தி, தென்னை நார் உற்பத்தி, தடுக்கு பின்னுதல் என கிராமப்புறத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்; கிராமப்புற பொருளாதாரத்தில், தென்னை சாகுபடி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, தென்னை மரங்களில், கட்டுப்படுத்த முடியாமல், பரவி வரும் வெள்ளை ஈ தாக்குதல் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோடை காலம் துவங்கியதும், வெள்ளை ஈ பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தென்னை ஓலைகளின் உட்பகுதியில், பெண் வெள்ளை ஈக்கள், தங்கி நீள் வட்ட வடிவில், முட்டையிடுகிறது.
கூட்டுப்புழு பருவத்திலிருந்து, 10 நாட்களில், இறக்கையுடன் கூடிய வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்கள் வெளியே வந்து, பரவுகின்றன.
ஓலைகளின் உட்புறத்தில், கூட்டமாக இருந்து, பச்சையம் மற்றும் சாறை உறிஞ்சி வளர்ச்சியை பாதிக்கின்றன. மேலும், இவ்வகை ஈக்கள் வெளியேற்றும் திரவம், ஓலைகளின் மேல்புறத்தில், விழுந்து, கரும்பூசணம் வளர்வதால், ஓலைகள் கருப்பு நிறத்துக்கு மாறி விடும்.
மரங்களின் ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு, வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. வேகமாக பரவும் தன்மை உடையதால், பல ஆண்டுகளாக போராடியும், வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர்.
நோய் பாதித்த மரங்களில், காய்ப்புத்திறன் இல்லாமல், போய் விடுகிறது; ஏக்கருக்கு, 2 ஆயிரம் தேங்காய் வரை ஒவ்வொரு பறிப்பின் போதும் குறைவதால், விவசாயிகளுக்கு பொருளாதார சேதம் ஏற்படுகிறது.
உடுமலை பகுதியில், இளநீருக்கென பிரத்யேகமாக குட்டை ரக தென்னை மரங்கள், பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு உற்பத்தியாகும் இளநீர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு, விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. வெள்ளை ஈ தாக்குதலுக்கு, இந்த குட்டை ரக தென்னை மரங்களே அதிகளவு உள்ளாகின்றன.
நோய்த்தாக்குதலால், முறையாக பாளை விடாதது பிஞ்சு உதிர்தல் பிரச்னை அதிகரித்து, இளநீர் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது; நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, பல்வேறு மருந்துகளை தெளித்தல், வேர் வழியாக மருந்து செலுத்துதல் என பல முறைகளை பின்பற்றியும் பலனில்லை.
கோடை காலம் துவங்கி, இளநீருக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைந்துள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் என இருதரப்பினருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வேளாண்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, உடுமலை பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

