/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய சூழலில் நல்ல ஆசிரியர் என்பவர் யார்?
/
இன்றைய சூழலில் நல்ல ஆசிரியர் என்பவர் யார்?
ADDED : செப் 05, 2024 12:31 AM

உயிர்களை படைப்பவர் மட்டுமல்ல, படைப் பாற்றலை விதைக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் கடவுள்களே. அவர்களுக்கான தினமான இன்று, ஆசிரியர்கள் சிலரிடமே , நல்ல ஆசிரியர்கள் என்பவர் யார் என்ற கேள்வியை முன்வைத்தோம். ஒவ்வொருவரும் அழகாக சொன்னார்கள்!
'படைப்பாற்றல் விதைப்பவர்'
கோவை அரசு கலைக்கல்லுாரி துணை முதல்வர் கனகராஜ் : படிப்பாற்றலை வளர்க்கும் ஆசிரியர்கள், படைப்பாற்றலை விதைப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். கட்டுப்பாடு என்ற பெயரில், மாணவர்களின் கற்பனை திறன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கற்பனைத்திறனே அறிவாற்றலின் அடிப்படை என்பதை உணர வேண்டும். குறிப்பாக, மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை அல்லாமல், தைரியம், தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், அறிவாற்றல், படைப்பாற்றல் கொண்ட மாணவர்களை, சமூகத்திற்கு வழங்குபவர்களே சிறந்த ஆசிரியர்கள்.
'திறன் அடையாளம் காண்பவர்'
பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் ரீனா கிறிஸ்டி: வகுப்பறை தாண்டிய கல்வியை தரும் ஒவ்வொருவரும் சிறந்த ஆசிரியர்களே. பாடபுத்தகங்களை கற்பிக்கவேண்டியது கடமை; அதை தாண்டி ஒவ்வொரு மாணவனின் தனித்திறனையும், அடையாளம் கண்டு அதை மேம்படுத்துபவர்களே நல்ல ஆசிரியர்கள்.
'அப்டேட் செய்பவர்'
அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் வீரமணி: மாணவர்களின் மனநிலை என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப கற்பிக்க வேண்டும். பாடத்திட்டங்களில் இருப்பது மட்டுமல்லாமல், எதிர்கால மாற்றங்களையும் கணித்து, அதை 'அப்டேட்' செய்துகொள்பவர்களாக இருப்பதே, தற்போது அவசியம். பலர் வேலை கிடைத்ததும் அப்டேட் செய்வதை விட்டுவிடுகின்றனர்.
'நல்ல மனிதர்களாக மாற்றுபவர்'
அரசு பொறியியல் கல்லுாரி (ஜி.சி.டி.,) முதல்வர் மனோன்மணி: நல்ல அறிவு, புத்தி கூர்மை மட்டுமின்றி, நம் கரங்களில் ஒப்படைக்கப்படும் மாணவர்களை, நல்ல மனிதர்களாக பண்படுத்தி சமூகத்திற்கு கொடுப்பவரே சிறந்த ஆசான். தற்போதைய சூழலில், இதுதான் குறைபாடாக உள்ளது; இதை மாற்றும் சக்தி, ஆசிரியர்களின் கரங்களில் தான் உள்ளது.
'முன்மாதிரியாக இருப்பவர்'
பி.எஸ்.ஜி கல்லுாரி பேராசிரியர் உமா : நல்ல ஆசிரியர் என்பவர் பாடங்களை கற்பிப்பவர்களாக மட்டும் அல்லாமல், முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். தன்னைத்தானே மேம்படுத்தி தன்னை சார்ந்த மாணவர்களையும் மேம்படுத்த வேண்டும். நேர்மை தவறாமை என்பது முக்கியமாக ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய பண்பு. வேலை கிடைத்து விட்டது என்று நின்று விடாமல், ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.