/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள் எழுப்பும் சந்தேகம்!
/
கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள் எழுப்பும் சந்தேகம்!
கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள் எழுப்பும் சந்தேகம்!
கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள் எழுப்பும் சந்தேகம்!
ADDED : மார் 25, 2024 01:13 AM
-நமது நிருபர்-
ம.தி.மு.க., பொருளாளர் பதவி பறிப்பு, ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு, சீட் கேட்டு வந்த தன் ஆதரவாளர்களிடம் ம.தி.மு.க., நிர்வாகிகள் செய்த அவமதிப்பு ஆகியவை, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணங்களாக இருக்குமா என்ற சந்தேகத்தை, அவரது ஆதரவாளர்கள் எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலின்போது, ம.தி.மு.க., பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தி.மு.க., - எம்.பி.,யாக கருதப்பட்டாலும், ம.தி.மு.க., பொருளாளராக தொடர்ந்து நீடித்தார்.
முதன்மை செயலராக துரை வைகோ பொறுப்பேற்றபோது, பொருளாளர் பதவியிலிருந்து கணேசமூர்த்தி விடுவிக்கப்பட்டார். அவரது பதவிக்கு, செந்தில் அதிபன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தி.மு.க.,வில் இருந்து வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ வெளியேறிய போது, அவருடன் வெளியேறிய 9 மாவட்ட செயலர்களில் ஒருவர், கணேசமூர்த்தி. அவர் ஒருவர் தான் தற்போது, வைகோவுடன் இருக்கும் மாவட்ட செயலர்; மற்றவர்கள் யாரும் தற்போது இல்லை.
மன உளைச்சல்
இந்த தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு கேட்டு, அவரது துாதர்களாக, ஈரோடு மாவட்ட செயலர் முருகன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் செந்தில், கணேசமூர்த்தி மகன் கபிலன் ஆகியோர் சென்னையில் வைகோ, துரை ஆகியோரை சந்தித்து பேசினர்.
அப்போது அங்கு மாநில நிர்வாகிகள் இருவரும் கணேசமூர்த்திக்கு சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை எனக் கூறி, துாதர்களை அவமதித்து ஈரோட்டிற்கு திருப்பி அனுப்பினர். இந்த விவகாரம், கணேசமூர்த்திக்கு மன உளைச்சலை அளித்துள்ளது.
திருச்சி தொகுதியில் துரை போட்டியிடும் தகவலை வைகோ தெரிவிக்காததும், கணேசமூர்த்திக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அவர், தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார் என, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
வாரிசு அரசியலை எதிர்த்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ம.தி.மு.க., இளைஞரணியை சேர்ந்த கோட்டை ஹக்கீம், முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்துள்ளார்.அடுத்த கட்ட நடவடிக்கை
ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள் சமூகவலை தளங்களில் பதிவிட்டுள்ள பதிவுகள் விவரம்:
வைகோ, 10 பிரதமர்களிடம் பழகினார். ஆனால், கட்சியை ஒரு அங்குலம் கூட அவரால் உயர்த்த முடியவில்லை. சிகரெட், பீடி விற்கும் அவரது மகன் துரை, கட்சியை வளர்த்து விட போகிறாரா?
அண்ணாதுரை ஆயிரம் தலைவர்களை உருவாக்கினார். தன் குடும்பத்திற்குள் அல்ல. வாரிசு அரசியலை ஏற்று கொள்பவர்கள், சமூக நீதிக்கு எதிரானவர்கள்.
lஎல்லா கட்சியிலும் வாரிசு தான் கட்சி நடத்த முடியும், வாரிசுக்கு திறமை இருக்கிறது என்றால், அது மற்ற வர்களுக்கு கேவலம் இல்லை.
இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
கணேசமூர்த்தியின் உடல் நலம் குறித்து விசாரிக்க, ம.தி.மு.க.,வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கோவை மருத்துவமனைக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். ஓரிரு நாளில், கொங்குமண்டலத்தில் அதிருப்தியாக இருக்கிற ம.தி.மு.க.,வினர் ஒன்று கூடி, கட்சியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

