/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்திரைக்கனி காண்பது எதற்காக?
/
சித்திரைக்கனி காண்பது எதற்காக?
ADDED : ஏப் 14, 2024 12:47 AM

தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகைகளில் பிரதானமானது, தமிழ் வருடப் பிறப்பு. சித்திரை மாதத்தின் முதல்நாளில் தமிழ் மக்களால் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்தச் சித்திரை திருநாள், சித்திரைக் கனி என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில்தான் முக்கனிகளான மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளின் விளைச்சல், அதிகமாக இருக்கும்.
கனிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடக்கூடிய இப்பண்டிகையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் முக்கியமாக இடம்பெறும்.
புதிய கண்ணாடி மற்றும் இஷ்ட தெய்வத்தின் படத்தை மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். ஒரு பெரிய தட்டில் பழங்கள், காய்கறி, கனி பூக்கள், நாணயங்கள், நகைகள், பணம், புத்தகம், வெற்றிலை, பழம், பாக்கு ஆகியவற்றை வைக்கலாம்.
அத்துடன் அரிசி, உப்பு, பருப்பு, மஞ்சள், சர்க்கரை ஆகிய 5 முக்கிய சமையல் பொருட்களை வைக்க வேண்டும். வலது, இடது புறமாக விளக்குகளை வைக்க வேண்டும்.
சுபிக் ஷத்தைப் பறைசாற்றும் இந்நன்னாளில், நகை மற்றும் பணத்தில் லட்சுமி, தீபத்தில் சக்தி, புத்தகத்தில் சரஸ்வதி என, முப்பெரும் தேவியரைக் காண்கிறோம் என்பது நம்பிக்கை.
பண்டிகையின் முதல் நாள் இரவே, இப்பொருட்களை எல்லாம் அலங்கரித்து வைத்துவிடுவர். மறுநாள் அதிகாலையில் எழுந்து, தீபம் பற்றவைத்த பின், இதில் கண்விழிக்க வேண்டும். இதுதான் 'கனி காணுதல்' என்று அழைக்கப்படுகிறது. கனி காணுதல் வாயிலாக, வருடம் முழுவதுமே வீட்டில் செல்வத்துக்கும், நன்மைகளுக்கும் குறைவிருக்காது என்பது நம்பிக்கை.
அதன் பின்னர், வீட்டின் பெரியவர்கள் குடும்பத்தில் உள்ள இளையவர்கள் மற்றும் சிறுவர்களை ஆசிர்வதித்து கைநீட்டமாக ஏதாவது பரிசு அளிப்பர். குடும்பத்துடன் இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

