/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றி, சிறுத்தை நடமாட்டம்
/
காட்டுப்பன்றி, சிறுத்தை நடமாட்டம்
ADDED : பிப் 21, 2025 11:20 PM
பெ.நா.பாளையம்; மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவைகளை உண்ண வரும் சிறுத்தைகளால் குடியிருப்பு பகுதிகளில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
இதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
துடியலூர் அருகே தாளியூரில் விவசாயி நடராஜன் தோட்டத்தில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் ரங்கநாதன், பொருளாளர் சண்முகம், அமைப்பாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வனத்தை விட்டு வெளியேறி பட்டா நிலங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் யானை வேட்டையனை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளா அரசு போல தமிழ்நாடு அரசும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மனித வனவிலங்கு மோதல் நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினர் இருட்டடிப்பு செய்கின்றனர்.
வனத்துறை வெளிப்படை தன்மையோடு செயல்பட முன்வர வேண்டும். காட்டுப்பன்றிகள் அபரிமிதமாக பெருகிவிட்ட நிலையில், காட்டுப்பன்றிகளை உணவாக உட்கொள்ளும் சிறுத்தைகள் வனத்தை விட்டு வெளியேறி பட்டா நிலங்களுக்குள் புகுந்து, விவசாய நிலங்களுக்குள் நிரந்தரமாகிய தங்கி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
மதுக்கரை, தொண்டாமுத்தூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பட்டா நிலங்களுக்குள் புகுந்து வசிக்கும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொன்று, அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்கள் அனைத்தும் வட்டியுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கனிம வள கொள்ளையில் தொடர்புடைய அரசு அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருமான வரி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது போல விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் அனைத்திலும் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.