/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள்... அட்டகாசம்!கட்டுப்படுத்தாததால் விவசாயிகள் விரக்தி
/
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள்... அட்டகாசம்!கட்டுப்படுத்தாததால் விவசாயிகள் விரக்தி
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள்... அட்டகாசம்!கட்டுப்படுத்தாததால் விவசாயிகள் விரக்தி
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள்... அட்டகாசம்!கட்டுப்படுத்தாததால் விவசாயிகள் விரக்தி
ADDED : மே 21, 2024 11:25 PM

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோலம்பாளையம், மருதுார், வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி, ஆதிமாதையனுார், கண்ணார்பாளையம், கோபனாரி, முள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை, வாழை, மக்காச்சோளம், தக்காளி, முட்டைகோஸ் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன.
இப்பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் காட்டு யானை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம்படுத்துகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் மருதுார் அருகே செல்லப்பனுாரில் 60க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் வந்து விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியது. விவசாயிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் காட்டுப்பன்றிகளை சப்தமிட்டு விரட்டினர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், ''காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட்டு கொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் விவசாயிகள், காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதிக்க வேண்டும். வனத்துறையினரின் அலட்சியத்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.
வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பது இல்லை. காட்டுப்பன்றிகளை, கட்டுப்படுத்த கோரி பல போராட்டங்களை மேற்கொண்டும், வனத்துறையினர் அதற்கு செவி சாய்க்கவில்லை,'' என்றார்.
இரவு நேர ரோந்து பணி தீவிரம்
இதுகுறித்து காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், ''வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க 2 குழுக்கள் வாயிலாக இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு, உரிய இழப்பீடு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு விவசாயிகள், தகவல் அளிக்க வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''வனவிலங்குகள் ஊருக்குள் வரமால் தடுக்க, வனப்பகுதிகளில் தேவையான இடங்களில் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அகழி தோண்டப்பட்டுள்ளது. மாநில அளவில் விவசாயிகள், வனத்துறையினர், வல்லுநர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பிற மாநிலங்களில் வனவிலங்குகள் எவ்வாறு ஊருக்குள், விளைநிலங்களுக்குள் வராமல் இருக்க கட்டுப்படுத்தப்படுகிறது என ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையை அரசிடம் சமர்பிப்பார்கள்,'' என்றார்.

