/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் காட்டுமாடு உலா; தொழிலாளர்கள் ஓட்டம்
/
ரோட்டில் காட்டுமாடு உலா; தொழிலாளர்கள் ஓட்டம்
ADDED : மார் 04, 2025 06:11 AM

வால்பாறை; வால்பாறையில், சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வன விலங்குகள் பகல் நேரத்திலேயே உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் காட்டுமாடு பகல் நேரத்திலேயே ஹாயாக உலா சென்றது. தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வாகனங்களில் வந்த சுற்றுலா பயணியர் காட்டுமாடு உலா செல்வதை கண்டு ரசித்தனர்.
* வால்பாறை அருகே, கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய், 24, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்கிய பின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த காட்டுமாடு, அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சஞ்சய், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து மளுக்கப்பாறை வனத்துறையினர் விசாரித்தனர்.