/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டத்தில் 14 மணி நேரம் முகாமிட்ட காட்டு யானைகள்
/
தோட்டத்தில் 14 மணி நேரம் முகாமிட்ட காட்டு யானைகள்
ADDED : ஜூலை 06, 2024 12:55 AM

தொண்டாமுத்தூர்;செம்மேட்டில், அதிகாலையில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம், இரவு வரை முகாமிட்டது.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட, நரசீபுரம் வனசுற்று, வன பகுதியில் இருந்து, நேற்றுமுன்தினம் இரவு, 12 காட்டு யானைகள் வெளியேறின. இதில், நேற்று அதிகாலை 7 யானைகள் கொண்ட கூட்டம், மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
குட்டியுடன் கூடிய நான்கு யானைகள் ஒரு கூட்டமாகவும், ஒற்றை யானை தனியாகவும், செம்மேடு பகுதிக்கு வந்தது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.
ஒற்றை யானை முட்டத்துவயல் பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து அரிசியை உண்டு விட்டு, பூண்டி வனப்பகுதிக்குள் சென்றது.
குட்டியுடன் கூடிய நான்கு யானைகள் கொண்ட கூட்டம், செம்மேட்டில் உள்ள தனியார் பாக்கு தோட்டத்திற்குள், அதிகாலை 6:00 மணிக்கு புகுந்தது.
வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியும், யானை கூட்டம் பாக்கு தோட்டத்திற்கு உள்ளேயே நின்று, அங்கிருந்த சணப்பை பயிர்களை உண்டு கொண்டிருந்தது.
காலை நேரமானதால், பூண்டி சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. இதனால், மாலை வரை வனத்துறையினர் காத்திருந்தனர். மாலை, 6:00 மணிக்கு, போலீசாரின் உதவியுடன் பூண்டி சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, பட்டாசு வெடித்தும், ஜே.சி.பி., வாகனத்தின் உதவியுடனும், யானைகளை விரட்ட முயற்சித்தனர்.
ஆனால் இரவு, 7:30 மணி வரை, காட்டு யானைகள் தோட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. அதன்பின்னும், தொடர்ந்து யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.