/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 06, 2024 11:15 PM

போத்தனூர் : பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை விரைவில் சீரமைக்கப்படுமா என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்,
போத்தனூர், நியூ டவுன் அருகே மாநகராட்சியின், 98வது வார்டு இ.பி.,காலனியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சாரதா மில் சாலையிலிருந்து இப்பகுதிக்கு செல்லும் சாலை சுமார் நூறு மீட்டர் நீளம் உடையது. இச்சாலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது.
பணி ஓரளவு முடிந்த நிலையில் சாலை சீரமைக்கப்படவில்லை. அப்பகுதியினர் வார்டு கவுன்சிலர் உதயகுமாரிடம் ஒரு மாதத்திற்கு முன் பிரச்னை குறித்து கூறினர். சாலையை நேரில் பார்வையிட்ட கவுன்சிலர் இரு வாரத்திற்குள் சீரமைப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால் சாலையில் மண் மட்டுமே போடப்பட்டது. தற்போது பெய்த மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. நடந்து செல்வதே சிரமம் எனும் நிலை ஏற்பட்டது.
அதிருப்தியடைந்த, அப்பகுதியினர் இரு நாட்களுக்கு முன், கவுன்சிலர் உதயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டனர். துரதிர்ஷ்டவசமாக வீடு பூட்டப்பட்டிருந்தது.
உதயகுமாரை ஆண்ட் ரூஸ் என்பவர், மொபைல்போனில் தொடர்புகொண்டார். கோவிலுக்கு சென்றுவிட்டதாக உதயகுமார் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பிரச்னை குறித்து கூறும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதிருப்தியடைந்த மக்கள் அங்கிருந்து திரும்பினர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'ஒரு மாதத்திற்கு முன் சாலையை சீரமைப்பதாக கவுன்சிலர் உறுதியளித்தார். இதுவரை எதுவும் செய்யவில்லை. வாகனங்களில் செல்வோர் தவறி விழுகின்றனர். விரைவில் சீரமைக்காவிடில், போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?