/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணைக்கும் தீர்வு வருமா?
/
சிறுவாணி அணைக்கும் தீர்வு வருமா?
ADDED : மே 06, 2024 12:25 AM
கோவை நகரின் குடிநீர்த் தேவைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பில்லுார் அணை மற்றும் சிறுவாணி அணைகளைத் துார் வார வேண்டுமென்பதை, 'தினமலர்' தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதில், சிறுவாணி அணையைத் துார் வார, கேரள அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இப்போது 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,வும், மா.கம்யூ., கட்சியும் இரு மாநிலங்களை ஆளும் நிலையில், இப்போதும் இதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அரசியலில் கை கோர்த்துள்ள தி.மு.க., அரசு, கூட்டணிக் கட்சியிடம் பேசி, இதை நிறைவேற்ற கையாலாகாத நிலையில் உள்ளது.
இது குறித்து, 'ஓட்டுக்கு மட்டும் கூட்டு; மக்கள் தேவைக்கு வேட்டு!' என்ற தலைப்பில், நமது நாளிதழில், மார்ச் 25 அன்று, முழுப்பக்கச் செய்தி, படத்துடன் வெளியானது. அதில், 'சிறுவாணி அணையைத் துார் வாருவது, இரு மாநிலப் பிரச்னை; ஆனால் பில்லுார் அணையைத் துார் வாருவது, தமிழக அரசின் கையில் தான் உள்ளது' என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவை லோக்சபா தேர்தலில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மூவருடைய கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன. அதன் எதிரொலியாகவே, இப்போது பில்லுார் அணையைத் துார் வாருவதற்கு, கோவை மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மே மாதத்துக்குள் இந்தப் பணியை விரைவாக முடித்தால், தென்மேற்குப் பருவமழையிலேயே கூடுதல் தண்ணீரைத் தேக்க முடியும்.
இதேபோல, கேரள அரசிடம் பேசி, இப்போதே சிறுவாணி அணையைத் துார் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு!