/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
6வது முறையாக வெற்றி! பொள்ளாச்சியை தக்க வைத்த தி.மு.க.,; 2.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம்
/
6வது முறையாக வெற்றி! பொள்ளாச்சியை தக்க வைத்த தி.மு.க.,; 2.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம்
6வது முறையாக வெற்றி! பொள்ளாச்சியை தக்க வைத்த தி.மு.க.,; 2.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம்
6வது முறையாக வெற்றி! பொள்ளாச்சியை தக்க வைத்த தி.மு.க.,; 2.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம்
ADDED : ஜூன் 05, 2024 09:05 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தொகுதியில், 6வது முறையாக வெற்றியை உறுதி செய்து, தி.மு.க., தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், உடுமலை, பொள்ளாச்சி, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, வால்பாறை, தொண்டாமுத்துார் சட்டசபை தொகுதிகள் உள்ளன.பொள்ளாச்சி தொகுதியில், 1951, 56, 62ம் ஆண்டுகளில், மூன்று முறை காங்., கட்சியும்; கடந்த, 1967, 71, மீண்டும், 71ம் ஆண்டு இடைத்தேர்தல் மற்றும், 1980, 2019 என, ஐந்துமுறை தி.மு.க., வெற்றி பெற்றது.
கடந்த, 1977, 84, 89, 91, 98, 2009, 2014 என, ஏழு முறை அ.தி.மு.க.,வும்; 99 மற்றும், 2004ம் ஆண்டு ம.தி.மு.க.,வும்; 96ல் தி.மு.க., கூட்டணியில் தமிழ் மாநில காங்., கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
பொள்ளாச்சி தொகுதியில், 29 ஆண்டுகளுக்கு பின், 2019ல் தி.மு.க., நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது, பாலியல் பிரச்னைகள் போன்ற காரணங்களினால், அ.தி.மு.க., தோல்வியடைந்தது. அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரனை விட, தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம், 1,75,883 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு போன்றவையும், ஆட்சி மீதான எதிர்ப்புகளை, ஓட்டுக்களாக மாற்றி வெற்றி பெறலாம் என, அ.தி.மு.க., திட்டமிட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு கட்சிபணிகளை முடுக்கி விட்டனர்.
ஆனாலும், பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்காதது, எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்றாலும் யாரை இவர்கள், ஆதரிப்பர் என்ற குழப்பம் மக்களிடையே காணப்பட்டது. அதே நேரத்தில், ஒரு சில தொகுதிகளில் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில், ஓட்டுக்கு 'கவனிப்பு' செய்தது, மக்களை முழுமையாக சென்றடையவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுபோன்று சம்பவங்களால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பை இழந்ததாக கூறப்படுகிறது. பிரச்னைகளை கண்டறிந்து களைந்தால் மட்டுமே, அ.தி.மு.க., சட்டசபை தேர்தலில் வெற்றியை பெற முடியும்.
தி.மு.க.,வினர், அரசின் சாதனைகளை கூறி ஓட்டு சேகரித்தனர். மேலும், அரசு பஸ்சில் பெண்கள் இலசவ பயணம், ஆயிரம் ரூபாய் என திட்டங்களை கூறி ஓட்டுகேட்டாலும், ஓட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்தனர். ஒரு சில இடங்களில், கோவில் பணிக்காக, 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து திட்டமிட்டு பணியாற்றியுள்ளனர்.
கை கொடுத்த தொகுதி
பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி, உடுமலை தொகுதியில் அதிகபட்சமாக, 51,993 ஓட்டுக்கள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார். அடுத்ததாக மடத்துக்குளத்தில், 46,592, கிணத்துக்கடவில், 46,582 ஓட்டுகளும், தொண்டாமுத்துாரில், 43,227 ஓட்டுகள் பெற்றார். வால்பாறையில், 35,134, பொள்ளாச்சியில், 33,716 ஓட்டுகள் அ.தி.மு.க.,வை விட அதிகமாக பெற்று முன்னிலை பெற்றார்.
வித்தியாசம் அதிகம்
பொள்ளாச்சி தொகுதியில், கடந்த, மூன்று லோக்சபா தேர்தல்களை ஒப்பிட்டால், இம்முறை தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி பெற்ற ஓட்டுக்களே அதிகம். மொத்தம், 5,33,377 ஓட்டுக்கள் பெற்ற அவர், 2,52,042 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இது, மற்ற தேர்தல்களை விட அதிக வித்தியாசம் என கூறப்படுகிறது. ஆறாவது முறையாக வெற்றியை பெற்று, தி.மு.க., தொகுதியை தக்க வைத்துள்ளது.