/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீங்கா நினைவுகளுடன்... எங்க ஊரு திருவிழா!
/
நீங்கா நினைவுகளுடன்... எங்க ஊரு திருவிழா!
ADDED : மார் 04, 2025 10:28 PM

மாரியம்மன் கோவில் திருவிழா, நகரம் மட்டுமின்றி, சின்னாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி என சுற்றியுள்ள கிராமங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவின் முதல் நிகழ்வாக நோன்பு சாட்டப்படுகிறது. நோன்பு சாட்டிய அடுத்த செவ்வாய் கிழமை கரியகாளியம்மன் கோவிலில் இருந்து கம்பம் கொண்டு வரப்பட்டு நடப்படுகிறது. அந்த கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கோவிலில் பூவோடு வைத்தல் நிகழ்வை தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி பூவோடு எடுத்தும், அலகு குத்தி பூவோடு எடுத்தும் வழிபாடு செய்கின்றனர்.
பூசணிக்காய் வழிபாடு
தேரோட்டம் அன்று, மாவிளக்கு பூஜை வழிபாடு, திருக்கல்யாண உற்சவம், தேர்த்திருவிழா மூன்று நாட்கள் நடத்தப்படுகின்றன. தேர்த்திருவிழா துவங்குவதற்கு முன்பாக வரக்கூடிய வெள்ளிக்கிழமை துஷ்ட தெய்வங்கள் அண்டாமல் இருக்க பூசணிக்காய் உடைத்து வீசப்படும். முதலில், இறைச்சியை வீசி எறியப்பட்டதாகவும், பின்னர் பூசணிக்காய் உடைத்து வீசப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பரிவேட்டை
தேர்த்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். மூன்றாவது நாள் நள்ளிரவு கோவிலில் தேர் நிலைநிறுத்தப்பட்டதும்; மாரியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி நடத்தப்படும். குதிரை வாகனத்தில் அம்மன் வேட்டைக்கு செல்வார்; அங்கு, திருடன், போலீஸ் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட பின்னர், தெப்பத்தேர் வைபவத்துக்கு அம்மன் வருவார்.
மஞ்சள் நீராட்டு
தெப்பத்தேர் வைபவம் நடத்தப்பட்ட பின், கோவிலுக்கு அம்மன் செல்வார். அடுத்த நாள், மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்படும். நகரம் முழுவதும், ஒன்பது சப்பரத்தில் அம்மன் வீதி உலா செல்வதுடன், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
சப்பரத்தில் வீதி உலா வரும் அம்மனுக்கு, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்தும், மஞ்சள் நீரை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.இந்த மஞ்சள் நீராட்டு விழா முடிந்து கோவிலில் அம்மன் எழுந்தருளியதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
திருவிழாவுக்காக நடப்பட்ட கம்பத்தில் இருந்து பூவோடு எடுக்கப்பட்டு தெப்பக்குளத்தில் விடப்படும். இதையடுத்து, அம்மனுக்கு வெள்ளை சேலை உடுத்தும் சம்பிரதாய நிகழ்வு நடத்தப்படுகிறது.
வெள்ளைச்சேலை
'மனித வாழ்க்கையை உணர்த்துவது போன்று, இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு சீர் வரிசை செய்து திருமணம் முடித்தல், கணவர் இறந்த பின் நடக்கும் சம்பிரதாயங்களை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக,' ஆன்மிக பெரியவர்கள், தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து, மகா அபிேஷகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மங்கலகரமான நிகழ்வுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழா, மக்களின் மனங்களின் நீங்கா இடம் பெறுகின்றன. திருவிழாவுக்காக வரும் சொந்தங்கள், நண்பர்கள் என வீடுகளும் கோலாகலமாக காணப்படும்.