/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்... கவனம்: பாதுகாப்பு உபகரணங்களை கையாள அறிவுரை
/
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்... கவனம்: பாதுகாப்பு உபகரணங்களை கையாள அறிவுரை
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்... கவனம்: பாதுகாப்பு உபகரணங்களை கையாள அறிவுரை
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்... கவனம்: பாதுகாப்பு உபகரணங்களை கையாள அறிவுரை
ADDED : மே 12, 2024 10:59 PM
பெ.நா.பாளையம்:வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், சமூகவிரோதிகள், திருடர்கள் உள்ளிட்ட
நபர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி
உள்ளனர்.
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் கடந்த, 5ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ரேணுகா, 44, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வீட்டுக்கு அருகே இருந்த சதீஷ், 34, என்ற நபரை கைது செய்து விசாரித்தனர். இதில், பணத்துக்கு ஆசைப்பட்டு ரேணுகாவை அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவர் கழுத்தில் இருந்த, 4 பவுன் தங்க செயினை திருடி, அவருடைய வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா
இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், ரேணுகா வீட்டில் தனியாக இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் சதீஷ் மதியம் முதல் கண்காணித்து வந்தது தெரியவந்தது.
ரேணுகா வீட்டின் முன் பக்கம் 'சிசிடிவி' கேமரா இருந்ததால், அந்த வழியாக வராமல், காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, உள்ளே நுழைந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், 24 மணி நேரத்தில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார், சதீஷை கைது செய்தனர்.
பின்னர் சம்பவ இடத்தில் போலீஸ் ஐ.ஜி., பவானீஸ்வரி நிருபர்களிடம் பேசுகையில், குடியிருப்புகளில் முக்கிய சந்திப்புகளில் 'சிசிடிவி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். இதனால் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட முன் வரும் நபர்களை, தடுத்து நிறுத்த முடியும். இச்சம்பவத்தில் குற்ற செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிக்க, 'சிசிடிவி' கேமரா பெரும் உதவியாக இருந்தது.
ஒலி எழுப்பும் கருவி
வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், வெளிப்புற கேட்டை பூட்டி, பத்திரமாக வீட்டுக்குள் இருக்க வேண்டும். வீட்டின் முன்புற கதவில் 'லென்ஸ்' பொருத்தி வெளியே நிற்கும் நபர்கள் யார் என, தெரிந்து கொண்டு, கதவை திறக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், கதவை திறப்பதை தவிர்த்து அருகே இருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், 'சிசிடிவி' போன்றவை பொருத்த வசதி இல்லாதவர்கள், 'பஸர்' எனப்படும் ஒலி எழுப்பும் கருவியை வீட்டில் மாட்டி வைப்பது நல்லது. பெண்களுக்கு அபாயம் என்றால் உடனடியாக பட்டனை அழுத்தினால் பஸர் ஒலி எழுப்பும்படி செய்யலாம். இதனால் சுலபமாக பெண்கள் அபாயத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் என்றார்.