/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு வேலை போட்டுத்தர மாட்டீங்களா? மாநகராட்சியிடம் மன்றாடுகிறது பழங்குடியின குடும்பம்
/
ஒரு வேலை போட்டுத்தர மாட்டீங்களா? மாநகராட்சியிடம் மன்றாடுகிறது பழங்குடியின குடும்பம்
ஒரு வேலை போட்டுத்தர மாட்டீங்களா? மாநகராட்சியிடம் மன்றாடுகிறது பழங்குடியின குடும்பம்
ஒரு வேலை போட்டுத்தர மாட்டீங்களா? மாநகராட்சியிடம் மன்றாடுகிறது பழங்குடியின குடும்பம்
ADDED : செப் 03, 2024 11:59 PM
கோவை;பில்லுார் இரண்டாவது குடிநீர் திட்டத்துக்காக, நிலம் கொடுத்த பழங்குடியின மக்களுக்கு வேலை கொடுப்பதாக, கோவை மாநகராட்சி உறுதியளித்திருந்தது. அதன்படி, வேலை வழங்காததால், அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மேயர் ரங்கநாயகியை சந்தித்து முறையிட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறுவாணி, பில்லுார் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆறுகளில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதில், பில்லுார் - 1, பிலலுார் - 2, பில்லுார் - 3 என மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பில்லுார் - 2வது திட்டம், 2006-11ல் நடந்த தி.மு.க., ஆட்சியின்போது, ரூ.114 கோடியில் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, பில்லுார் அணையில் இருந்து பெரியகோம்பை குகை நுழைவாயிலைக் கடந்து, கோபனாரி காப்புக்காடுகள் வழியே, 1,500 மி.மீ., விட்டமுள்ள குழாய் பதிக்கப்பட்டது.
12 குடும்பத்தினரின் நிலம்
நெல்லிமரத்துார் மலைக்கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த, 12 குடும்பத்தினர், வனத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட, 4.8 ஏக்கர் விவசாய நிலத்தை இதற்காகக் கொடுத்தனர்.
வனத்துறை வழங்கிய நிலத்தை விற்க முடியாது என்பதால், 20 ஆண்டு குத்தகைக்கு எழுதிக் கொடுத்தனர். அதற்கு ஈடாக, நெல்லிமரத்துார் கிராமத்துக்கு சாலை, குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்; விவசாயம் செய்ய பாசன வசதி செய்து தரப்படும்; நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப, குடிநீர்த் திட்டத்தில் வேலை அளிக்கப்படும் என, 2009 ஜூன் 22ல், மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை நம்பி, பழங்குடியினர் விவசாய நிலத்தைக் கொடுத்தனர். நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு தலா, 26 ஆயிரத்து, 383 ரூபாய் மட்டுமே இழப்பீடு தரப்பட்டிருந்தது.
நிலம் கொடுத்த குடும்பத்தினரில், தலா ஒருவருக்கு வேலை கொடுக்க, மாநகராட்சியால் கல்வித்தகுதி சேகரிக்கப்பட்டது; சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் கல்வி சான்று இல்லை.
விண்ணப்பதாரர்கள் யாரேனும் இறந்திருந்தால், அவர்களது இறப்பு சான்று சமர்ப்பிக்க வேண்டுமென கூறியதால், வேலை வழங்குவது இழுபறியானது. இன்று வரை வேலை கிடைக்காமல் சில குடும்பத்தினர் அல்லாடுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேயரிடம் விண்ணப்பம்
நிலம் கொடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களில், வடுகன் என்பவரின் மகன் முருகன், கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் ரங்கநாயகியிடம் மனு கொடுத்தார்.
அதில், 'நாங்கள் பழங்குடியின இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். பில்லுார் இரண்டாவது குடிநீர் திட்டத்துக்காக நிலம் கொடுத்தோம். அப்போது, கோவை மாநகராட்சியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாக உறுதியளிக்கப்பட்டது. 2013ல் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக சேர்த்தனர்; 2018ல் அவ்வேலையில் இருந்தும் நிறுத்தி விட்டனர். குடிநீர் திட்டத்துக்காக விவசாய நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளோம். எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, துறை அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதியளித்துள்ளார்.