/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்பத்துக்காக வெயிலில் உருகும் உழைப்பாளிகள்!
/
குடும்பத்துக்காக வெயிலில் உருகும் உழைப்பாளிகள்!
ADDED : மே 01, 2024 12:59 AM

கோவை மாவட்டத்தில், கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு வெயில் வாட்டி எடுக்கிறது.
இந்த கடும் வெயிலிலும் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டட தொழிலாளிகள், சுகாதார பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டியில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகள், தார் சாலை போடுபவர்கள் உள்ளிட்டோர் வேறு வழியின்றி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் வருவாயை நம்பிதான் குடும்பத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, மளிகை, போக்குவரத்து இப்படி அத்தனையும் உள்ளது. இதனால், எவ்வளவுதான் வெயில் சுட்டெரித்தாலும், பிழைப்புக்காக வெளியில் இறங்கியே ஆக வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.
குடும்பத்துக்காக பாடுபடும் இவர்களுக்கு, ஒரு பெரிய சல்யூட்!
கவர்மென்டு உதவுமா?
நான் மதுரையில இருந்து கோவைக்கு வந்து 18 வருஷமாச்சுங்க. இது நாள் வரை இப்படி ஒரு சூடு, வெயில பார்த்தது இல்லை. தினமும் தள்ளுவண்டில போய் தான் பழைய இரும்புகளை எடுத்து, வியாபாரம் செய்றேன். வயித்துக்கு சோறு வேணும். ஆண்டவன் விட்ட வழின்னு, வேலையை பார்த்துக்கிட்டிருக்கேன். இந்த வெயில்ல வியாபாரமும் இல்ல. வெயில்ல சுத்தி, சுத்தி உடம்பு சரியில்லாம போனதுதான் மிச்சம். எங்கள மாதிரி ஆளுங்களுக்கு இந்த டைம்லயாச்சும், கவர்மென்டு உதவுனா நல்லாருக்கும்.
- குமரன் இரும்பு வியாபாரி.
ரொம்ப சோர்வாகிறது
ஊர்ல நமக்கு குடும்பம் இருக்கு. சின்ன சின்ன குழந்தைங்க இருக்காங்க. ஏதாவது வேலை செஞ்சு பொழச்சுக்கலாம்னு இங்க வந்தேன். கடன் நிறைய இருக்கு. இந்த வெயில்ல தினமும் வேலை செய்றதால, உடம்பு ரொம்ப சோர்வாகி போயிருது. சாப்பிடவும் முடியலை. வெயில்ல ரெஸ்ட்டு இல்லாம அலையறதால, உடம்புல வியர்க்குரு மாதிரி பிரச்னைகள்லாம் வருது. என்ன செய்ய...குடும்பம் குழந்தைங்களை நெனச்சு பாடுபட வேண்டியிருக்கு.
- முனியப்பன் கட்டட தொழிலாளி.
பச்ச தண்ணி சூடாயிருது!
வெயிலுக்கு ஒரு கிளாஸ் தண்ணி கூட குடிக்க முடியாத நிலைதான், கட்டட தொழிலாளி நிலைமை. பாட்டில்ல பச்ச தண்ணி கொண்டு வந்து வச்சா, கொஞ்ச நேரத்துல சூடாயிருது. மத்தவங்க எப்படின்னு தெரியல; ஆனா, நாங்க இந்த வெயில்ல நின்னுதான் வேலை பார்க்கணும். குடும்பம், குழந்தைங்க எல்லாம் நம்மள நம்பிதான் இருக்காங்க. வெயில், மழை எல்லாத்துலயும் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாதான் பிழைக்க முடியும். என்ன செய்யறது!
- வேடியப்பன் கட்டட தொழிலாளி.
சாப்பிட முடியலை தம்பி
எனக்கு வயசு 67 ஆச்சு தம்பி. இந்த வெயில் மனுசன சுட்டெரிக்குது. குடை வெச்சு தான் வியாபாரம் செய்றேன். இவ்வளவு வெயில், சூட்டை உடம்பு தாங்க மாட்டேங்குது. தண்ணிய குடிச்சு, குடிச்சு சாப்பிட முடிய மாட்டேங்குது. இந்த வெயிலுக்கு தலைவலி அதிகமா வருது. என்ன பண்றது... வேற வழி இல்லை. கவர்மென்டு சைடுல இருந்தும் ஒரு உதவியும் இல்ல. பென்சனுக்கு கேட்டு போனாலும், இங்க போங்க, அங்க போங்க, இந்த ஆபிசுக்கு போங்க, அந்த ஆபிசுக்கு போங்கன்னு அலையவிடுறாங்க. என்னதான் செய்யறதுன்னு தெரியலை. பொழப்பு ஏதோ நடக்குது.
- சுப்ரமணியன் சாலையோர வியாபாரி.
சவாரியே இல்லீங்க!
எப்பவும் இல்லாத அளவுக்கு, இந்த வருஷம் வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. ஜனங்க யாருமே வெளியில வர்றதில்லை. ஆட்டோகாரங்களுக்கு சவாரியே கிடைக்கறதில்லை. ஸ்கூலுக்கு லீவுங்கறதால, ஸ்கூல் 'டிரிப்'பும் இல்லை. காலையில இருந்து வண்டிய ஏதாவது மரத்தடில நிறுத்திட்டு, சும்மாதான் இருக்கோம். சுத்தமா வருமானமே இல்லாம ஆயிருச்சு. இந்த வெயில்ல ஆட்டோ ஓட்டுறதால, உடம்பும் சீக்கிரம் டயர்டு ஆயிருது. எப்படியும் நாலு காசு பார்த்தாகணும்னு காத்து கிடக்கோம்.
- மணிகண்டன் ஆட்டோ ஓட்டுனர்.