ADDED : மே 06, 2026 03:40 PM
வால்பாறை மே 7–: வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் பதுங்கும் சிறுத்தையால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரத்திலேயே ரோட்டில் நடமாடுகின்றன.
வால்பாறை நகர் வாழைத்தோட்டம், காமராஜ் நகர் பகுதியில் பகல் நேரத்தில் சிறுத்தை குட்டியுடன் நடமாடுவதை மக்கள் நேரில் கண்டு பீதியடைந்தனர்.
இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பொதுமேலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட்டில், கடந்த சில நாட்களாக சிறுத்தை உலா வருவதை தொழிலாளர்கள் கண்டு பீதியடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், ‘வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் கரடிகள் நடமாட்டம் தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், சமீப காலமாக சிறுத்தைகளும் எஸ்டேட் பகுதிக்குள் உலா வருகின்றன. இதனால் பகல் நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம். சிறுத்தை நடமாட்டத்தால் தொழிலாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,’ என்றனர்.
