/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு; மாணவர்களுக்கு ஓவிய போட்டி
/
பள்ளிகளில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு; மாணவர்களுக்கு ஓவிய போட்டி
பள்ளிகளில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு; மாணவர்களுக்கு ஓவிய போட்டி
பள்ளிகளில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு; மாணவர்களுக்கு ஓவிய போட்டி
ADDED : மார் 24, 2024 11:58 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா, தண்ணீர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கினார்.
நீர் மாசுபடுதல் விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது. நீர், சேமிப்பு, மழைநீர் சேமிப்பு குறித்து கவிதை வாசித்தனர். நீர் சேமிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, நீரை வீணாக்க மாட்டோம் என உறுதிமொழியேற்றனர். மேலும், நீர் சேமிப்பு பற்றிய ஓவிய போட்டி நடந்தது.
* கொல்லப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, செடிகள் பராமரிப்பு செய்ததுடன், சொட்டு நீர் குழாய் அமைத்து, நீர் விட வசதிகளை ஏற்படுத்தினர்.
* சூளேஸ்வரன்பட்டி குட்ெஷப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் நீர் சேமிப்பு மற்றும் நீரின் தேவைகள் குறித்து வலியுறுத்தினர். பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லுாரியில், ரோட்ராக்ட் கிளப், எக்கோ அக்ரி கிளப், யங் இந்தியன் கிளப் சார்பில், உலக தண்ணீர் தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தண்ணீரின் தேவை மற்றும் அதன் பயன்படுத்துவதின் சிக்கனம் குறித்தும், அதை பாதுகாப்பது குறித்தும் விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.
தண்ணீர் சிக்கனம், நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் சென்று மக்களிடம் வலியுறுத்தும் வகையில் பேரணி நடந்தது. கல்லுாரி பேராசிரியர்கள் முனைவர் கிரிபிரகாஷ், செல்வகுமார் மற்றும் ரோட்ராக்ட் மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
* பொள்ளாச்சி அருகே மணக்கடவு வாணவராயர் வேளாண்மை நிறுவனம் சார்பில், சர்வதேச காடு, உலக நீர் மற்றும் வானிலை தினத்தை கொண்டாடியது. முனைவர் பூர்ணிமா வரவேற்றார். வானவராயர் வேளாண்மை நிறுவன இயக்குநர் முனைவர் கெம்பு செட்டி, துணை முதல்வர் முனைவர் சிவசுவாமி பேசினர். முதல்வர் முனைவர் பிரபாகர் தலைமை வகித்தார்.
பேராசிரியர்கள் முனைவர் பாக்கியலட்சுமி மற்றும் முனைவர் நந்தகுமார் ஆகியோர், இன்றைய உலகில் காடுகள், நீர் மற்றும் வானிலை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த முக்கிய வளங்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
புதுமையான நீர் பாதுகாப்பு நுட்பங்கள் குறித்து, கோவை தமிழ்நாடு வேளாண்பல்கலை ஓய்வு பெற்ற நீர் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் பன்னீர்செல்வம் பேசினார்.
இதில், காடுகள் குறித்த மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. இது நமது கிரகத்தின் பசுமை அட்டையின் அழகு மற்றும் முக்கியத்துவத்திற்கான காட்சிப் பயணத்தை வழங்குகிறது.
வனம் மற்றும் நீர் பாதுகாப்பு பற்றி பேசும் ஒரு மைம் நிகழ்ச்சி சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், சிறந்த பங்களிப்பை வழங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

