/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொய் பிரசாரம் செய்து குழப்பறாங்க!
/
பொய் பிரசாரம் செய்து குழப்பறாங்க!
ADDED : ஏப் 11, 2024 06:40 AM

பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், களம் இறங்கி உள்ள வேட்பாளர்கள் சிலர், மத்திய அரசால் நிறைவேற்றக் கூடிய, நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை, அள்ளி வீசி ஓட்டு கேட்கின்றனர்.
'தி.மு.க., வெற்றி பெற்றால், ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்,' என, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வாயிலாக ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன்பின், தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது, விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரம், வேடச்சந்துார் பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டத்தை அரசு கைவிட்டது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதேநேரம், ஒட்டன்சத்திரம் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 600 கோடி ரூபாய் மதிப்பில் காவிரியில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதன்படி, காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்படும் தண்ணீர், அரவக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இச்சூழலில், அரசியல் ஆதாயத்துக்காக, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மாற்றுக்கட்சி வேட்பாளர்கள், வேண்டும் என்றே பொய் பிரசாரத்தை பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் அவரவர் செய்த சாதனைகள் மற்றும் திட்டங்களைக் கூறி பிரசாரம் செய்யலாம். தி.மு.க.,வினர் எதிர்வேட்பாளர்கள் குறித்து விமர்சனம் செய்வது கிடையாது.
இவ்வாறு, கூறினார்.

