சிங்கவால் குரங்குகளுக்காக 10 இடங்களில் துாரிப்பாலம்
சிங்கவால் குரங்குகளுக்காக 10 இடங்களில் துாரிப்பாலம்
ADDED : ஜன 31, 2026 04:56 AM

வால்பாறை: வால்பாறையில், சிங்கவால் குரங்குகள் ரோட்டில் நடமாடும் போது விபத்து ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் துாரிப்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இவை உணவு மற்றும் குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடக்கின்றன. இது போன்ற சூழ்நிலையில் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க, புதுத்தோட்டம் ரோட்டில் ஏற்கனவே ஆறு இடங்களில் துாரிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரங்குமுடி, சின்கோனா, வறட்டுப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வனத்துறை சார்பில் துாரிப்பாலம் அமைக்கப்படவுள்ளது.
மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் கூறியதாவது:
அரிய வகை வனவிலங்குகளில் ஒன்றான சிங்கவால் குரங்குகள், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகமாக காணப்படுகின்றன. வால்பாறையில், இந்த வகை வனவிலங்குகள் அதிகமாக உள்ளன.
இவை ரோட்டை கடக்கும் போது, விபத்தில் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க, வனத்துறை சார்பில், பத்து இடங்களில் துாரிப்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இவ்வாறு, கூறினார்.
