/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடன் வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் அபேஸ்
/
கடன் வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் அபேஸ்
ADDED : பிப் 20, 2025 06:26 AM
போத்தனூர்; கோவை தொழிலதிபரிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி, ரூ. 10 லட்சத்தை அபேஸ் செய்து தப்பிய ஐந்து பேரை, போலீசார் தேடுகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 44. தற்போது திருப்பூர் மாவட்டம், போடிபாளையத்தில் உள்ள நஞ்சப்பா நகரில் வசிக்கிறார்.
இவர் மேலும் இருவருடன் சேர்ந்து கூட்டாக, கத்ரா லைப் ஸ்டைல் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிறுவனத்தை விரிவுபடுத்த மூவரும் முடிவு செய்தனர்.
அப்போது தொழில்முறையில் மூன்று மாதங்களுக்கு முன், அறிமுகமான வாடிப்பட்டியை சேர்ந்த பிரபு, தனது நண்பர் சந்தோஷ் மூலம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக, கோவிந்தராஜிடம் கூறியுளளார்.
அதற்கு கமிஷனாக தனக்கு, 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். ஒத்துக்கொண்ட கோவிந்தராஜ், 10 லட்சம் ரூபாயுடன் நேற்று முன்தினம், க.க.சாவடி அடுத்து நவக்கரைக்கு வந்துள்ளார். அங்கு ஆவண நகலை பிரபு கேட்டுள்ளார். கோவிந்தராஜ் தன்னிடமிருந்த ரூ.10 லட்சம் ரொக்கத்தை, பிரபு மற்றும் சிலர் இருந்த வாகனத்தில் வைத்துவிட்டு, நகல் எடுக்கச் சென்றார்.
திரும்ப வந்தபோது அவ்வாகனத்தை அன்வர், சஞ்சய் எனும் இருவர் ஓட்டிச்சென்று விட்டதாக, பிரபு கூறியுள்ளார்.
தொடர்ந்து பிரபு, சந்தோஷ் மற்றும் ஒருவரும், அவர்களை அழைத்து வருவதாக கூறி சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் அவர்களை தொடர்பு கொண்டபோது, மதுக்கரை ஆர்.டி.ஓ., அலுவலகம், நீலம்பூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு வருமாறு கூறி அலைக்கழித்துள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பின், பிரபு உள்ளிட்ட அனைவரும் மொபைல் போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்துள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோவிந்தராஜ், க.க.சாவடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் ஏமாற்றிய ஐந்து பேர் கும்பலை தேடுகின்றனர்.