/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோமாரி நோய் தடுப்பூசி 100 சதவீத இலக்கு பூர்த்தி
/
கோமாரி நோய் தடுப்பூசி 100 சதவீத இலக்கு பூர்த்தி
ADDED : ஆக 07, 2025 09:14 PM
பொள்ளாச்சி; கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நுாறு சதவீதம் முழுமை பெற்றுள்ளது.
கால்நடைகளை தாக்கும் கொடிய நோய் கோமாரி. இந்த நோய் தாக்கிய கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறையும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், சாணம் வாயிலாக, மற்ற கால்நடைகளுக்கும் எளிதில் பரவும்.
நோய் தாக்கிய மாட்டு பாலை குடிக்கும் கன்றுகளுக்கு, இருதய தசை அழற்சி ஏற்பட்டு இறந்து விடும். விவசாயிகளுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக, தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்., மாதங்கள் என, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அவ்வகையில், கடந்த மாதம், கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில், 84 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், 39 கால்நடை மருந்தகங்களில், ஒரு கால்நடை டாக்டர், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை உதவியாளர் அடங்கிய குழுவினர் இதற்கான பணியில் ஈடுபட்டனர். இப்பணி நுாறு சதவீதம் முழுமை பெற்றுள்ளதாக, கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.