/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி செல்லா குழந்தைகள் 100 பேர் கண்டறியப்பட்டனர்
/
பள்ளி செல்லா குழந்தைகள் 100 பேர் கண்டறியப்பட்டனர்
ADDED : அக் 18, 2024 10:38 PM
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து வருவாய் துறை, தொழிலாளர் துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, காவல் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவிற்கு நீண்ட நாள்களாக, பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த விவரங்களை, அந்தந்த பகுதி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வழங்குகின்றனர். இக்குழுவினர் அந்த மாணவர்களை தொடர்பு கொண்டும், நேரில் சென்றும், உறவினர்கள், பெற்றோர்களிடம் பேசி, அம்மாணவரை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் பகுதிகளில் இக்குழுவினர் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்தனர். அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று, ஏன் பள்ளிக்கு வரவில்லை, குடும்ப சூழ்நிலை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டனர். பின், மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவம், பள்ளி செல்லவில்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளை, எடுத்துக்கூறி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அறிவுரை கூறினர். இதையடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள், தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குழந்தைகளின் பெற்றோர் பலரும் குடும்ப சூழ்நிலை சரியில்லை, குழந்தைக்கு படிப்பு வரவில்லை, பள்ளிக்கூடம் செல்ல அடம்பிடிக்கிறார்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறமுடியாததால் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர் என பல்வேறு காரணங்களை கூறினர். எங்களது குழுவினர், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் அறிவுரை கூறினோம். மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது அவ்வாறு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தோம். இதையடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர். உறுதி அளித்தவாறு குழந்தைகள், பள்ளிக்கு அனுப்பப்பட்டனரா எனவும் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.