/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எடையளவு விதிமுறை மீறல்; 102 நிறுவனங்கள் சிக்கின
/
எடையளவு விதிமுறை மீறல்; 102 நிறுவனங்கள் சிக்கின
ADDED : அக் 10, 2025 10:36 PM
- நமது நிருபர் -
கடந்த செப்டம்பர் மாதம், தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், எடையளவு, பொட்டல பொருட்கள் விதிகளை மீறிய, 102 நிறுவனங்கள் சிக்கியுள்ளன.
தொழிலாளர் துறையினர் சார்பில், கடைகள், வணிக நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், எடையளவு, முத்திரை, மறு முத்திரை இடப்படாத எடையளவு பயன்பாடு, மறு பரிசீலனை சான்று வைக்கப்படாதது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பல விதிமுறை மீறிய நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், எடையளவு தொடர்பாக, 32 நிறுவனங்கள்; பொட்டல பொருட்கள் விதியை பின்பற்றாதது, அதிகபட்ச விலையைவிட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளிட்ட ஏழு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடைகள், வணிகம், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகளில், தொழிலாளர் நல சட்டங்களை மீறிய 63 நிறுவனங்கள் என, மொத்தம் 102 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கூலி வழங்காத, ஆறு நிறுவனங்களின் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு, 1.85 லட்சம் ரூபாய் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை, Pencil Portal தளத்திலும்; 1098 என்கிற கட்டமில்லாத எண்ணிலும்; கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155514, 112 எண்களில் தெரிவிக்கலாம்; எடையளவு சட்டம் தொடர்பான புகார்களை, 1915 மற்றும் 1800114000 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம் என, தொழிலாளர் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.