/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 மாதங்களில் 10,268 மாற்றுத்திறனாளிகள் சேர்ப்பு
/
2 மாதங்களில் 10,268 மாற்றுத்திறனாளிகள் சேர்ப்பு
ADDED : ஜூலை 22, 2025 10:48 PM
கோவை; டி.என்.ரைட்ஸ் மற்றும் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில், 10,268 மாற்றுத்திறனாளிகள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும், அவரவர் இல்லங்களுக்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், டி.என்., ரைட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 150க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த, ஜூன் முதல் வாரத்திலிருந்து, மாவட்டத்தின் அனைத்து வீடுகளிலும் தகவல் சேகரிப்பு பணி நடந்துவருகிறது.
மாற்றுத்திறனாளிகள் துறை திட்ட அலுவலர் சுந்தரேசன் கூறியதாவது:
டி.என். ரைட்ஸ் திட்டத்தின் கீழ், வீடு வீடாக மாற்றுத்திறனாளிகள் சார்ந்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இக்கணக்கெடுப்பு வாயிலாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பல திட்டங்கள் எதிர்காலத்தில் வகுக்கப்படும்.
உலகளவில் மொத்த மக்கள் தொகையில், 3 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்திய அளவில், 2.2 சதவீதமாகவும், தமிழகத்தில் 1.7 சதவீதமாகவும் உள்ளது. கோவையின் புள்ளிவிபரங்கள் படி, 24,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
ஆனால், பலர் தயக்கம், விழிப்புணர்வு இன்மை காரணமாக, மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் வெளியில் சொல்வதில்லை. குறைபாடுகள் சிறியதாக இருக்கும் போது சிகிச்சை எடுத்தால், எளிதாக குணப்படுத்த இயலும். இதன் காரணமாக, வீடு வீடாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தரலாம். ஆதார், வங்கிக்கணக்கு போன்ற விபரங்கள் கேட்கப்படாது. இரண்டு மாதங்களில், 10,268 மாற்றுத்திறனாளிகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.