/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலாறு படுகைக்கு 11.6 டி.எம்.சி., நீர் கேட்பு! விடாப்பிடியாக நிற்கும் திருமூர்த்தி திட்டக்குழு; முடிவு எடுக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
/
பாலாறு படுகைக்கு 11.6 டி.எம்.சி., நீர் கேட்பு! விடாப்பிடியாக நிற்கும் திருமூர்த்தி திட்டக்குழு; முடிவு எடுக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
பாலாறு படுகைக்கு 11.6 டி.எம்.சி., நீர் கேட்பு! விடாப்பிடியாக நிற்கும் திருமூர்த்தி திட்டக்குழு; முடிவு எடுக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
பாலாறு படுகைக்கு 11.6 டி.எம்.சி., நீர் கேட்பு! விடாப்பிடியாக நிற்கும் திருமூர்த்தி திட்டக்குழு; முடிவு எடுக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
ADDED : நவ 21, 2024 09:19 PM

பொள்ளாச்சி; 'திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, 11,600 மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டும்,' என, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுவினர், அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரித்து, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மண்டலத்துக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
பருவமழை பெய்யும் காலத்தில், ஐந்து சுற்று வரை தண்ணீர் கிடைத்ததால், மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
காலப்போக்கில், ஆண்டுக்கு பெய்ய வேண்டிய சராசரி மழை கை கொடுக்காத சூழலில், ஒரு மண்டலத்தில் ஐந்து சுற்று என்பது, மூன்று, இரண்டு என படிப்படியாக குறைந்தது. பருவமழை கை கொடுக்கும் காலத்தில் மட்டும் நான்கு சுற்று வரை தண்ணீர் வழங்கப்படுகிறது.
அதிலும், மூன்றாம் மற்றும் நான்காம் மண்டல பாசன காலத்தில் மழை இல்லாத சூழலில், இருக்கும் நீரை பகிர்ந்து நிலை பயிர்களை காப்பாற்றும் சூழலே நீடிக்கிறது. கடந்தாண்டு நிலை பயிரான தென்னையை காப்பாற்ற உயிர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது.
நடப்பாண்டு பருவமழை கை கொடுத்ததால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் நிரம்பியுள்ளன. பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பின், காண்டூர் கால்வாய் வழியாக நீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நீர் இருப்பு செய்து, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆழியாறு, பாலாறு படுகைக்கு நீர் பங்கீடு சமமாக இல்லை எனக்கூறி திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு குற்றச்சாட்டு தெரிவித்தது. இதற்காக கூட்டம் நடத்தவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியது.
அதன்படி, பொள்ளாச்சியிலுள்ள பி.ஏ.பி., அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம் நடந்தது. திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வழங்கியது போன்று, திருமூர்த்தி பாசனத்துக்கும் சமமாக நீர் பங்கீடு செய்து வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, 22,116 ஏக்கர் நிலங்களுக்கு, 2,709 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது. அதேபோன்று, திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்தில், 94,500 ஏக்கர் நிலங்களுக்கு, 11,600 மில்லியன் கனஅடி (11.6 டி.எம்.சி.) நீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதற்கு அதிகாரிகள், 10 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் மட்டுமே வழங்க முடியும். அதற்கு மேல் வழங்க வேண்டுமென்றால் நீர் இருப்பு மற்றும் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்வதாக தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படாமல் கூட்டம் முடிந்தது.