/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12.7 ஆயிரம் டன் உரம் கோவையில் இருப்பு; வேளாண் இணை இயக்குனர் தகவல்
/
12.7 ஆயிரம் டன் உரம் கோவையில் இருப்பு; வேளாண் இணை இயக்குனர் தகவல்
12.7 ஆயிரம் டன் உரம் கோவையில் இருப்பு; வேளாண் இணை இயக்குனர் தகவல்
12.7 ஆயிரம் டன் உரம் கோவையில் இருப்பு; வேளாண் இணை இயக்குனர் தகவல்
ADDED : டிச 09, 2024 11:16 PM
கோவை; வடகிழக்குப் பருவமழை காலத்துக்குத் தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை::
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவாக, 351.7 மி.மீ பெய்துள்ளது. தற்போது ராபி பருவத்திற்கு தேவையான யூரியா 2,591 டன், டி.ஏ.பி., 895 டன், பொட்டாஷ் 3,848 டன், காம்ப்ளக்ஸ் 3,765 டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 1,619 டன் என, மொத்தம் 12 ஆயிரத்து 718 டன் இரசாயன உரம், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளநீர் தேங்கியுள்ள விளை நிலங்களில் இருந்து, உடனடியாக, வடிகால் அமைத்து, நீரை வெளியேற்ற வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இள மஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிர்களுக்கு இலைவழி உரமாக 1 கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மேகமூட்டமான வானிலை காரணமாக, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ளது. வெள்ள மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும். மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை காக்க 4 கிலோ டி.ஏபி உரத்தை 10 லிட்., நீரில் ஊற வைத்து மறு நாள் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இந்தக் கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தை 200லி தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில், கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு, வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

