/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 1,400 'சிசிடிவி' கேமரா! கோவை மாநகரில் நிறுவ முடிவு
/
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 1,400 'சிசிடிவி' கேமரா! கோவை மாநகரில் நிறுவ முடிவு
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 1,400 'சிசிடிவி' கேமரா! கோவை மாநகரில் நிறுவ முடிவு
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 1,400 'சிசிடிவி' கேமரா! கோவை மாநகரில் நிறுவ முடிவு
ADDED : பிப் 12, 2025 12:19 AM

கோவை; குற்ற சம்பவங்களை தடுப்பதில், கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிப்பதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரில்,மேலும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பொது இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையை, போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் தங்களது வீடுகள், கடைகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகின்றனர்.
கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை கண்காணித்து முறைப்படுத்தவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் போலீசார் சார்பில், பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகும் காட்சிகள், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
முக்கிய இடங்களில் உள்ள கேமராக்கள் 'நைட் விஷன்,' 360 டிகிரி சுழலும் தன்மை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளன. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை மாநகரில் மேலும், 1,400 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறியதாவது:
மாநகரில், போலீஸ் கட்டுப்பாட்டில், 500க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இவற்றில், 207 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து கேமராக்களையும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க, 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்களை' பதிக்க வேண்டியுள்ளது.
இது தவிர, மாநகரில் 1,600 இடங்களில், 8,500 கேமராக்கள் உள்ளன. இந்த, 1,600 இடங்களும் 'ஜியோ டேக்' செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மேலும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்கு, நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்கள் குறைந்துள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.