/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலம் வாங்கிய 1.5 லட்சம் பேர் வீட்டு வசதி வாரியம் மவுனம் ஆவணத்துக்கு காத்திருப்பு
/
நிலம் வாங்கிய 1.5 லட்சம் பேர் வீட்டு வசதி வாரியம் மவுனம் ஆவணத்துக்கு காத்திருப்பு
நிலம் வாங்கிய 1.5 லட்சம் பேர் வீட்டு வசதி வாரியம் மவுனம் ஆவணத்துக்கு காத்திருப்பு
நிலம் வாங்கிய 1.5 லட்சம் பேர் வீட்டு வசதி வாரியம் மவுனம் ஆவணத்துக்கு காத்திருப்பு
ADDED : மார் 10, 2026 04:51 AM

கோவை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நில ஆர்ஜித முன்னெடுப்பு திட்டத்தில், பத்திரங்கள் மற்றும் விடுவிப்பாணை, தடையில்லா சான்று கிடைக்காமல், 1.5 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
1970களில் வீடு இல்லாதவர்களுக்கு குறைந்த தொகையில் மனையிடத்தையும் வீடுகளையும் வழங்கியது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.
இதற்காக கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், 1970ம் ஆண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆர்ஜிதம் செய்த நில உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி வாரியம் சரியான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.
பத்து சதவீத தொகையை மட்டுமே, சில நில உரிமையாளர்களுக்கு வழங்கியது. மற்ற உரிமையாளர்களுக்கு வழங்காமலேயே, வீட்டுவசதி வாரிய திட்டத்தை அறிவித்து விற்பனையையும் துவக்கியது.
ஆர்ஜிதத்துக்காக முன்மொழிவு செய்த நிலங்கள், வருவாய்துறை ஆவணங்களில் முறையாக பதிவேற்றம் செய்ப்படாததால், அந்நிலம் வாங்கிய பலரும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் திட்டக்குழும அனுமதியுடன் வீடு கட்டி குடியேறினர்.
நில ஆர்ஜிதம் செய்து பல ஆண்டுகளுக்கு பிறகு 26.11.2007ல் வருவாய் பதிவேடுகளில் 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்' என்ற பெயருடன் அறிவிப்பு வெளியானது.
அதில் நில உரிமையாளர்கள் பெயர் இல்லை. பணம் கொடுத்து வாங்கிய பலரும் கொந்தளித்தனர். குடியிருந்தாலும் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமானது என்பதை அனுபவரீதியாக உணர்ந்தனர். தங்கள் பெயருக்கு மாற்றுமாறு பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
3.06.2023ல் முதல்வரின் முன்னெடுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. உடனடியாக தமிழகம் முழுக்க உள்ள, 16 வீட்டு வசதி வாரிய அலுவலகங்களிலும் புகார் பெட்டி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
தீர்வு காண ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பழனிகுமார், டாக்டர் முனியநாதன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. நிலஆர்ஜிதம் செய்த நிலங்கள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டன.
முதல் வகையில் இடம் பிடித்த, 1,672 ஏக்கர் நிலங்கள் அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்து, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு ஆணையை முதல்வர் வழங்கினார்.
இரண்டாம் வகையின்படி, 2,723 ஏக்கர் நில உரிமையாளர்களுக்கு பெயர் மாற்றம் செய்து ஆவணங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் இன்னும் வீரகேரளம், வடவள்ளி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கணபதி, வெள்ளக்கிணர், இடையர்பாளையம் ஆகிய ஏழு பகுதிகளில் வசிக்கும், 1.5 லட்சம் பேர் பத்திரம், விடுவிப்பாணை, தடையில்லா சான்று கிடைக்கும் நாளுக்காக காத்திருக்கின்றனர்.
அரசுக்கு நினைவூட்டுவதாக
வாரிய அதிகாரிகள் உறுதி
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'இவையனைத்தும் முதல்வர் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சரால் நேரடியாக செய்யப்பட்டவை. நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை. இது குறித்து அரசுக்கு நினைவூட்டுகிறோம்' என்றனர்.

