ADDED : மார் 10, 2026 05:25 AM

வால்பாறை: அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில், 'கபாலி' யானை வாகனங்களை விரட்டுவதால் சுற்றுலா பயணியர் பீதியடைந்துள்ளனர்.
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் வால்பாறை அமைந்துள்ளது. வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு அதிகளவில் செல்கின்றனர்.
இந்நிலையில், மளுக்கப்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அருவி செல்லும் ரோட்டில் கடந்த சில மாதங்களாக 'கபாலி' என்றழைக்கப்படும் ஆண் யானை ஒன்று அடிக்கடி ரோட்டில் உலா வருகிறது. இதனால் சில நேரங்களில் வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில், நீண்ட கால இடைவெளிக்கு பின் கடந்த இரண்டு நாட்களாக அதிரப்பள்ளி ரோட்டில் 'கபாலி' யானை மீண்டும் நடமாட துவங்கியுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களை விரட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில செல்லும் சுற்றுலா பயணியர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
அதிரப்பள்ளி ரோட்டில் 'கபாலி' யானை நடமாடுவதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்கள் வளைவுகளில் கவனமாக செல்ல வேண்டும். 'கபாலி' யானையை கண்டால் தொந்தரவு செய்யாமல் வாகனங்கைளை பின் நோக்கி நகர்த்தி வழிவிட்டால் போதும்.
இந்த ரோட்டில் இருசக்கர வாகனங்களில் செல்வதை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும். யானையை துன்புறுத்தவோ அதன் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறி யானையை தொந்தரவு செய்தால் அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
