/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு அழகை ரசிக்க 1.50 லட்சம் பேர் வருகை
/
ஆழியாறு அழகை ரசிக்க 1.50 லட்சம் பேர் வருகை
ADDED : ஜூன் 03, 2025 12:12 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே உள்ள, ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு, கடந்த மே மாதம், 1.50 லட்சம் சுற்றுலா பயணியர் வருகை புரிந்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களாக, ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி பகுதிகள் உள்ளன.
இப்பகுதிகளுக்கு, வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில், பொழுதை கழிப்பதற்காகவே, மக்கள் பலரும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிகின்றனர்.
கோடை விடுமுறையின் போது, சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், கோவை மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆழியாறுக்கு குடும்பத்துடன் சுற்றலா வந்தனர்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கவியருவிக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், பூங்காவில் உள்ள நீரோடையில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். கடந்த மே மாதம், 1.50 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து சென்றுள்ளனர்.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர், பூங்கா மற்றும் அணைப்பகுதிக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். கடந்த வாரம் மழையின் தாக்கம் அதிகரித்த போதும், சுற்றுலா பயணியர் வந்து சென்றுள்ளனர்,' என்றனர்.