/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டை அடமானம் வைத்து 1.70 கோடி ரூபாய் மோசடி
/
வீட்டை அடமானம் வைத்து 1.70 கோடி ரூபாய் மோசடி
ADDED : ஜூன் 12, 2025 07:51 AM
கோவை; மருத்துவச் செலவுக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி, கோவையைச் சேர்ந்த முதியவரின் வீட்டை அடமானம் வைத்து, ரூ.1.70 கோடி மோசடி செய்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், வடவள்ளி அருகே உள்ள, வீரகேரளம் அரசு அலுவலர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் சேஷாத்ரி, 55. இவரது தந்தை சுப்ரமணியம், 85. 2019ல் உடல்நிலை சரியில்லாமல் கோமா நிலைக்குச் சென்றார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், வங்கியில் மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற முயற்சித்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜா, பிரபாகரன் ஆகியோர் அறிமுகமாகினர். வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி, தொண்டாமுத்துார் சார் பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்று, சுப்ரமணியத்தின் கைரேகையை பெற்றுக் கொண்டனர். ஆனால், பணம் எதுவும் கொடுக்கவில்லை. 2019, டிச., 11ல் சுப்ரமணியம் உயிரிழந்தார். இதனால், சேஷாத்ரி பணம் கேட்கவில்லை.
இச்சூழலில், ஏப்.,22ல் தனியார் வங்கி ஊழியர்கள், சேஷாத்ரி வீட்டுக்கு வந்தனர். வீட்டை அடமானம் வைத்து, ரூ.1.70 கோடி கடன் பெற்றுள்ளதாகவும், கடனை திருப்பிச் செலுத்தாததால், ஜப்தி செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வங்கி மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் சேஷாத்ரி விசாரித்தார்.
சுப்ரமணியம் பெயரில் இருந்த வீட்டை, 2019 டிச., 5ல் பிரபாகரன் பெயருக்கு மாற்றியிருந்தது தெரியவந்தது. வீட்டு ஆவணங்களை வைத்து தனியார் வங்கியில், ரூ.25.5 லட்சம் கடன் பெற்று, அதை திருப்பியும் செலுத்தியுள்ளனர்.
இதன் பின், மீண்டும் வேறொரு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில், ரூ.1.70 கோடிக்கு வீட்டை அடமானம் வைத்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. வடவள்ளி போலீசில் சேஷாத்ரி புகார் அளித்தார். போலீசார் விசாரித்து ராஜா, சிதம்பரி, பிரபாகரன் உட்பட ஏழு பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.