/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
18 சதவீத ஜி.எஸ்.டி. எங்களுக்கு நெருக்கடி; 5 சதவீதமாக குறைக்க 'டேக்ட்' கோரிக்கை
/
18 சதவீத ஜி.எஸ்.டி. எங்களுக்கு நெருக்கடி; 5 சதவீதமாக குறைக்க 'டேக்ட்' கோரிக்கை
18 சதவீத ஜி.எஸ்.டி. எங்களுக்கு நெருக்கடி; 5 சதவீதமாக குறைக்க 'டேக்ட்' கோரிக்கை
18 சதவீத ஜி.எஸ்.டி. எங்களுக்கு நெருக்கடி; 5 சதவீதமாக குறைக்க 'டேக்ட்' கோரிக்கை
ADDED : அக் 02, 2025 12:50 AM

கோவை; 'ஜாப் ஆர்டர் செய்யும் குறுந்தொழில்களுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்' என, தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்கள் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தில், 'ஜாப் ஒர்க்' தொழில்களுக்கு ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறுந்தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜாப் ஆர்டர் செய்வோர், மூலப்பொருட்களை வாங்குவதோ, உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதோ இல்லை. பெரிய நிறுவனங்களிடம் இருந்து மூலப்பொருட்களை வாங்கி, 'மெஷினிங்' எனப்படும், அவர்கள் கோரும் பணிகளைச் செய்து தருவதே வேலை.
எனவே, 18 சதவீத ஜி.எஸ்.டி., என்பது 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடி. 12 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்கக்கோரி வந்தோம். தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.,க்கு முன், 2 சதவீத டி.டி.எஸ்., பிடித்தம் மட்டுமே இருந்தது. தற்போது 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால், மாதம்தோறும் 20ம் தேதி பணத்தைக் கட்டியாக வேண்டும். கட்ட முடியாவிட்டால், இ-வே பில் முடக்கம், வங்கிக் கணக்கு முடக்கம், தொழிற்சாலையை மூடுதல் என நெருக்கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மாதம் ரூ.2 லட்சத்துக்கு பணி செய்தால், ரூ.36 ஆயிரம் வரி கட்டியாக வேண்டும். எங்களால் இத்தொகையை உள்ளீட்டு வரியாகவும் எடுக்க முடியாது. ஏனெனில், நாங்கள் பொருட்களை விற்பவர்கள் அல்ல. எங்களுக்குத் தேவையான கருவிகளை வாங்கும்போது ஜி.எஸ்.டி., கழித்தாலும் சுமார் 6 ஆயிரம் ரூபாயே வரும். மீதமுள்ள தொகை எங்களுக்கு பெரும் சுமை.
மின்கட்டணம், தொழிற்சாலை வாடகை, ஆட்கள் கூலி என செலவுபோக, நஷ்டமே வரும். எந்த நிறுவனமும் 45 நாட்களுக்குள் ஆர்டருக்கான தொகையைத் தருவதில்லை. சில சமயங்களில் 180 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் 18 சதவீத வரி என்பது, மிகப்பெரும் நெருக்கடியை அளிப்பதாக உள்ளது. வெட்கிரைண்டர் உட்பட இன்ஜினியரிங் உற்பத்தித் துறைக்கு மூலப்பொருட்கள் முதல் அனைத்து மதிப்புச் சங்கிலிகளையும், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.