/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1.8 டன் ஜெலட்டின் குச்சிகள் கோவையில் சிக்கியது; ஒருவர் கைது
/
1.8 டன் ஜெலட்டின் குச்சிகள் கோவையில் சிக்கியது; ஒருவர் கைது
1.8 டன் ஜெலட்டின் குச்சிகள் கோவையில் சிக்கியது; ஒருவர் கைது
1.8 டன் ஜெலட்டின் குச்சிகள் கோவையில் சிக்கியது; ஒருவர் கைது
ADDED : ஆக 26, 2025 11:26 PM

போத்தனுார்; கோவை, மதுக்கரை அருகே, கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற, 1.8 டன் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள், தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் சிக்கியது. ஒருவர் கைது செய்யப்பட்டார்; மூவரை தேடுகின்றனர்.
கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., ஜோசப்புக்கு, சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ஜெலட்டின் குச்சிகள் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் ஏட்டுகள் மருதாசலமூர்த்தி, சந்துரு, செந்தில்குமார் ஆகியோருடன், மதுக்கரை மரப்பாலம் முதல் எட்டிமடை செல்லும் சாலையில் உள்ள, அல்பாரி ஓட்டல் அருகே நேற்று அதிகாலை கண்காணித்தனர்.
ஒரு கார் நிற்காமல் சென்றது. அதைத்தொடர்ந்து வந்த சரக்கு வாகனத்தை (டி.என். 25 பிகே 3979) நிறுத்தி சோதனையிட்டனர். 75 பெட்டிகளில் தலா, 200 வீதம், 15 ஆயிரம் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் (1.875 டன் ), உரிய ஆவணங்களின்றி கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரிந்தது.
டிரைவரிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், மலப்புரம், மொரையூர், அரிம்ப்ரா பகுதியை சேர்ந்த சுபைர், 41 என்பதும், சேலம், அயோத்திபட்டினத்தைச் சேர்ந்த மூவர், வெடிமருந்து பொருட்களை கடத்திச் சென்று, கேரளாவில் உள்ள கல்குவாரிகளுக்கு விற்பனை செய்வதும் தெரிந்தது.
சரக்கு வாகனம், வெடிமருந்து பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சுபேரை கைது செய்து மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் விசாரணை நடத்துகிறார். காரில் தப்பிய மூவரை தேடுகின்றனர். ஜெலட்டின் குச்சிகள் இந்தளவு பிடிபடுவது இதுவே முதல்முறை.