/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
216 ஏக்கரில் கரவளி மாதப்பூரில் அமைகிறது சரக்கு முனைய பூங்கா!கோவை தொழிற்துறையினர் வரவேற்பு
/
216 ஏக்கரில் கரவளி மாதப்பூரில் அமைகிறது சரக்கு முனைய பூங்கா!கோவை தொழிற்துறையினர் வரவேற்பு
216 ஏக்கரில் கரவளி மாதப்பூரில் அமைகிறது சரக்கு முனைய பூங்கா!கோவை தொழிற்துறையினர் வரவேற்பு
216 ஏக்கரில் கரவளி மாதப்பூரில் அமைகிறது சரக்கு முனைய பூங்கா!கோவை தொழிற்துறையினர் வரவேற்பு
ADDED : ஏப் 26, 2024 01:39 AM

சூலூர்:கோவை மாவட்டத்தில் முதல் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா, கரவளி
மாதப்பூர் கிராமத்தில், 216 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் 'மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்' எனும், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில், 35 இடங்களில் முதல்கட்டமாக, சரக்கு முனைய பூங்காக்களை உருவாக்க திட்டம் வகுத்துள்ளது.
கோவையில் சரக்கு போக்குவரத்து பூங்கா
இதன் மூலம், ஓரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு உற்பத்தி பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும். தேசிய நெடுஞ்சாலைகள், ரயில், ரோடுகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் இந்த சரக்கு போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதற்கான நிலங்களை கண்டறிந்து கையகப்படுத்தி தர மாநில அரசுகளை, மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அமைக்கப்பட உள்ள சரக்கு போக்குவரத்து முனைய பூங்காக்கள் பட்டியலில், சென்னையும், கோவையும் இடம் பெற்றுள்ளன. கோவை மாவட்டத்தில் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிநிறுவனம் (டிட்கோ) சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.
அதில், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர், கரவளி மாதப்பூர், ராசிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 216.83 ஏக்கர் நிலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பட்டா நிலங்கள், 211.50 ஏக்கரும், அரசுக்கு சொந்தமான நிலங்கள், 5.33 ஏக்கர் என, 216.83 ஏக்கர் நிலங்கள் தணிக்கை செய்யப்பட்டும், அளவீடு செய்யப்பட்டும் நிர்வாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்ட தொழிற்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழில்துறையினர் வரவேற்பு
இந்திய தொழில் வர்த்தக சபை மாவட்ட தலைவர் ஸ்ரீ ராமுலு கூறுகையில்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் லாஜிஸ்டிக் சேவை அதிக செலவை ஏற்படுத்துகிறது. கோவையில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி அதிகரிக்கும். நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். போக்குவரத்து செலவு பெருமளவு குறையும். எனவே திட்டத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம், என்றார்.
சோமனூரை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் மயில்சாமி கூறுகையில்,சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கிரே காடா துணி ரகங்கள் லாரிகள் மூலம் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், உற்பத்தியாளர்களுக்கு வாடகை செலவு அதிகமாகிறது.
சரக்கு போக்குவரத்து பூங்காவில் இருந்து, ரயில்கள் மூலம் சரக்குகள் அனுப்பும் வசதியும் இருக்கும் என்பதால், குறைந்த செலவில் துணி ரகங்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப முடியும். போக்குவரத்து செலவு குறையும் போது, உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் விலை குறையும். இதனால், மக்கள் பயன்பெறுவர், என்றார்.

