ADDED : ஏப் 08, 2026 06:34 AM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில், 77 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பரிசீலனை செய்து, 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட, கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்., 6ம் தேதி வரை, வேட்புமனு தாக்கல் நடந்தது.
இதில், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நா.த.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என, மொத்தம், 49 வேட்பாளர்கள், 77 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை, பேரூர் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மாருதி பிரியா தலைமையில் நேற்று நடந்தது.
இதில், வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பங்கேற்றனர். பரிசீலனைக்கு பின், தேவையான ஆவணங்களை இணைக்காதவர்கள், விண்ணப்ப படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்யாதவர்கள் என, 55 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை (ஏப்.,9ம் தேதி) வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாள் என்பதால், மாலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாராகும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
