ADDED : ஏப் 15, 2026 05:28 PM
கோவை: மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பின், இதுவரை 2.5 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தன.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் பணி கடந்த அக்., முதல் நடந்து வருகிறது.
புதிய வாக்காளர்கள் மட்டுமின்றி, பழைய அட்டையில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வடிவிலான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த அக்., முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதும் 2.5 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தபால் மூலம் அனுப்பப்படும் இந்த அடையாள அட்டைகளில் ஒரு பகுதி, உரியவர்களிடம் சேராமல் மீண்டும் தேர்தல் அலுவலகத்திற்கே திரும்பி வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,200 புதிய அட்டைகள் இப்படி திரும்பியுள்ளன. அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் ஆள் இல்லாதது முக்கிய காரணம்.
தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 30 முதல் 40 அட்டைகள் வரை அலுவலகத்திற்குத் திரும்பி வருவதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
