/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்தில் 250 ரேஷன் கடைகள் மூடல்
/
கோவை மாவட்டத்தில் 250 ரேஷன் கடைகள் மூடல்
ADDED : அக் 07, 2025 11:26 PM
தொண்டாமுத்துார்; தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களை வகைப்பாடு செய்யாமல், 2023 மார்ச் மாதம் பெற்ற சம்பளத்தின் மீது, 20 சதவீத ஊதிய உயர்வு, அனைவருக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி அனுமதிக்க வேண்டும். 2021ல் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2021க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1000த்தை, ரூ.5,000 என உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற் ற வலியுறுத்தி, நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்தன் கூறுகையில், ''கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில், 141 தொடக்க மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும், 250 ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றும் வரை, தொடர் வேலைநிறுத்தம் தொடரும்,'' என்றார்.