/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டு தலைமறைவு பயங்கரவாதி கைது
/
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டு தலைமறைவு பயங்கரவாதி கைது
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டு தலைமறைவு பயங்கரவாதி கைது
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டு தலைமறைவு பயங்கரவாதி கைது
ADDED : ஜூலை 10, 2025 11:35 PM

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய நபரை கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
குண்டு வெடிப்பு
கடந்த, 1998ம் ஆண்டு கோவையில் 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 58 பேர் உயிரிழந்தனர். 231 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முதல் குற்றவாளியாக இருந்த அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 25 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் கடந்த, டிச., மாதம் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் மற்றும் சாதிக் என்கிற டெய்லர் ராஜா ஆகியோர் தலைமறைவாகினர்.
கைது
இருவரையும் பிடிக்க சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.டெய்லர் ராஜா கர்நாடகா மாநிலம், விஜயபுரா பகுதியில் வசித்து வருவதாக கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கர்நாடகா மாநிலம் சென்றனர்.
அங்கு, காய்கறி மார்க்கெட் ஒன்றில் வியாபாரி போல் இருந்துள்ளார். தனது அடையாளங்கள் அனைத்தையும் மாற்றிக்கொண்டு அங்கு வசித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.
அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்த பிறகு, கோவை ஜெ.எம்., 5 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரித்த நீதிபதி வெர்ஜின் வெஸ்டா, டெய்லர் ராஜாவை வரும், 24ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த ராஜா, அல் உம்மா இயக்கத்தில் சேர்வதற்கு முன் டெய்லராக பணியாற்றி வந்தார். பின்னர், அல் உம்மா இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார். வாடகைக்கு வீடு எடுத்து, வெடிகுண்டுகள் தயார் செய்து பதுக்கி வைத்து, அல் உம்மா நபர்களுக்கு 'சப்ளை' செய்தார்.
மேலும், 1996ம் ஆண்டு கோவையில் பெட்ரோல் குண்டு வீசி ஜெயிலர் பூபாலன், இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டதாக நாகூரில் சயீதா என்ற பெண் மற்றும் 1997ம் ஆண்டு மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோரின் கொலை வழக்கிலும் டெய்லர் ராஜா முக்கிய குற்றவாளியாக இருந்தார்.
போலீசார் கூறுகையில்,'தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், மாநகர போலீசாரின் உதவியுடன் நீண்டகாலமாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் படி கடந்த வாரம், ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அபு பக்கர்சித்திக், முகமது அலி என்கிற யூனுஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 28 ஆண்டுகளுக்குபிறகு டெய்லர் ராஜாவை கைது செய்துள்ளோம். இவர் கோவைக்கு வந்து சென்றுள்ளரா?, அங்கு இவருடன் வசித்து வந்தவர்கள் யார் மற்றும் வியாபாரியாக மட்டும் இருந்தாரா அல்லது வேறு தொழில் ஏதும் செய்து வந்தாரா என்பது விசாரணையில் தெரியவரும்,' என்றனர்.