/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்படுவதால்... பறிபோகும் 2,800 ஏக்கர் நிலம்
/
புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்படுவதால்... பறிபோகும் 2,800 ஏக்கர் நிலம்
புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்படுவதால்... பறிபோகும் 2,800 ஏக்கர் நிலம்
புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்படுவதால்... பறிபோகும் 2,800 ஏக்கர் நிலம்
ADDED : அக் 21, 2024 03:47 AM
அன்னுார் : திட்டமிடப்பட்டுள்ள கோவை--சத்தி புறவழிச்சாலை மற்றும் கோவை-- கரூர் பசுமை சாலையால், 2,800 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழு சார்பில்,கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை, உத்தேசிக்கப்பட்ட புறவழிச்சாலை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். மனித-விலங்கு மோதலை அதிகரிக்கும். இந்த உத்தேச புறவழிச் சாலை சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே இணையும் இந்த திட்டம் திம்பம் மற்றும் கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு நோக்கி போக்குவரத்தை அதிகரிக்கும்.
தற்போது வனப்பாதையை பாதுகாக்கப்பட்ட காடுகள் வழியாக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் பாதையை மேம்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே ஏற்கனவே உள்ள கோவை--சத்தி தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தலாம். இத்துடன் கரூர் முதல் கோவை வரை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைக்கு மிக அருகில் 3 கி.மீ., தொலைவில் அதே இடங்களை இணைக்கும் புதிய உத்தேச பசுமை வழிச் சாலை வளங்களை வீணடிக்கும்.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முன்மொழிவுப்படி கோவை மற்றும் கரூருக்கு இடையே உள்ள தூரத்தில் ஆறு கி.மீ., மட்டுமே குறையும். வெறும் ஆறு கி.மீ.,துாரம் குறைவதற்காக 2800 ஏக்கர் விவசாய நிலங்களை அழிப்பது வீணான செயலாகும். தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள கிழக்கு ரிங் ரோடு கோவையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்காது. பயணம் செய்யும் துாரம் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகள் ரிங் ரோட்டை பயன்படுத்த மாட்டார்கள்.
தற்போது உத்தேசிக்கப்பட்ட ரிங் ரோட்டுக்கு மாறாக விரிவாக்கம் செய்யலாம். சங்கனுார் - வண்ணான் கோவில் ஆகியவற்றுக்கு இடையே மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து சத்தி சாலையை இணைக்கும் 12 சாலைகள் உள்ளன. இதில் சில சாலைகளை மேம்படுத்தினால் கோவை மாநகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழக முதல்வர், நெடுஞ்சாலைதுறை அமைச்சர், மின்துறை அமைச்சர், கோவை எம்.பி.,கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குனர், மாநில நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் ஆகியோருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

