/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு சங்கங்களுக்கான மானியத்தில் 3% லஞ்சம்; கோவையில் நடந்த சோதனையில் அம்பலம்
/
கூட்டுறவு சங்கங்களுக்கான மானியத்தில் 3% லஞ்சம்; கோவையில் நடந்த சோதனையில் அம்பலம்
கூட்டுறவு சங்கங்களுக்கான மானியத்தில் 3% லஞ்சம்; கோவையில் நடந்த சோதனையில் அம்பலம்
கூட்டுறவு சங்கங்களுக்கான மானியத்தில் 3% லஞ்சம்; கோவையில் நடந்த சோதனையில் அம்பலம்
ADDED : ஏப் 27, 2025 07:20 AM

கோவை: தமிழகத்தில் கூட்டுறவு நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களுக்கு, தமிழக அரசு வழங்கிய தள்ளுபடி மானிய தொகையில், காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருச்சி சரக கூட்டுறவு அதிகாரிகளிடம் 3 சதவீதம் லஞ்சம் வாங்கியது, கோவையில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களுக்கும், தமிழக அரசு வழங்கிய தள்ளுபடி மானியத்தில், 3 சதவீதம் தொகையை லஞ்சமாக வசூலித்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது.
இதன்படி, கோவை மாவட்டம், வதம்பச்சேரி ஸ்ரீராமலிங்க சூடாம்பிகா பருத்தி மற்றும் பட்டு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக மேலாளர் சவுண்டப்பன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மேலாளர் சவுண்டப்பன் இருக்கைக்கு அருகே இருந்த இரும்பு பணப்பெட்டியை சோதனை செய்தபோது, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், கோவை என, அந்தந்த சரகங்களின் பெயர்களை குறிப்பிட்டு, 3 சதவீதம் தொகை என எழுதி, கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது.
அந்த பணத்தை கைப்பற்றி, சவுண்டப்பனிடம் விசாரித்தபோது, மேலாண்மை இயக்குனர் பொம்மையாசாமி, உதவி இயக்குனர் வெற்றிவேல் ஆகியோர் உத்தரவுப்படி, தமிழகத்தில், 18 கூட்டுறவு சங்கங்களில் உள்ள கூட்டுறவு நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களுக்கு அரசு வழங்கிய மானிய தொகையில் இருந்து 3 சதவீதம் தொகையை வசூலித்ததும், அத்தொகையை கோவை கணபதியில் உள்ள பாலாஜி விசைத்தறி சங்க மேலாளர் பால்ராஜிடம் ஒப்படைக்கச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல, ஒவ்வொரு சரகத்தில் இருந்தும், யார், யார் வாயிலாக இந்த தொகையை வசூலித்தனர் என்ற விபரத்தையும் தெரிவித்தார். இந்த வகையில், லஞ்ச பணம் 15 லட்சத்து, 89,950 ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.
பின், மேலாண்மை இயக்குனர் பொம்மையாசாமி முன்னிலையில் பதிவேடுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். பதிவேடு தகவல்களுக்கும், கைப்பற்றிய பணத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதி செய்தனர். சவுண்டப்பன் மொபைல் போனில் 'வாட்ஸாப்' வாயிலாக தகவல்கள் பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததால், அந்த போனையும் பறிமுதல் செய்தனர்.
இச்சோதனை வாயிலாக கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்கிய தள்ளுபடி மானியத்தில், உயரதிகாரிகள் வரை கமிஷன் வாங்கியிருப்பதும், கூட்டுறவு துறையில் பெரும் முறைகேடு நடந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள, அனைத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவேடுகளை ஆய்வு செய்தால், மானியம் விடுவித்ததில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வரும்.

