/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டாச்சு...
/
3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டாச்சு...
ADDED : டிச 15, 2025 05:10 AM
மேட்டுப்பாளையம்: அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.
இதனால் சாலையின் இருபக்கம் உள்ள 800க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு ஈடாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என நெடுஞ்சாலைதுறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக அவிநாசி வரை உள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டதாகும்.
சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், அவிநாசி, அன்னூர், மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டிக்கு செல்கின்றனர்.
இதுதவிர உள்ளூர் மக்களும் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை வழியாக தினமும் 4,000 மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 38 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இந்த சாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்தது. கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக, 800-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்களுக்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகளை நட மாநில நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, இச்சாலையில், காரமடை அன்னூர், - சிறுமுகை, இரும்பறை உள்ளிட்ட பகுதிகளில் வேம்பு, மகாகனி என பல்வேறு வகையிலான 3000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை சுமார் 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், 1000 மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம், என்றார்.---

