/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வீஸ் ரோடு பிரச்னையில் 3 ஆண்டுகளாக மெத்தனம்! கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., ஆதங்கம்
/
சர்வீஸ் ரோடு பிரச்னையில் 3 ஆண்டுகளாக மெத்தனம்! கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., ஆதங்கம்
சர்வீஸ் ரோடு பிரச்னையில் 3 ஆண்டுகளாக மெத்தனம்! கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., ஆதங்கம்
சர்வீஸ் ரோடு பிரச்னையில் 3 ஆண்டுகளாக மெத்தனம்! கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., ஆதங்கம்
ADDED : டிச 03, 2024 06:24 AM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சர்வீஸ் ரோட்டை எம்.எல்.ஏ., தாமோதரன் நேற்று ஆய்வு செய்தார்.
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சர்வீஸ் ரோடு வழியாக வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இப்பகுதியில் குடியிருப்புகளும் அதிகம் இருப்பதால், எதிரெதிர் திசையில் வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயும் சேதமடைந்துள்ளதால், கழிவு நீர் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால் அவ்வழியில் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், டி.இ.எல்.சி., பள்ளி அருகே சர்வீஸ் ரோட்டை ஆய்வு செய்தார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவு பெற்று, 5 ஆண்டுகள் ஆகிறது. இதில், போக்குவரத்து அதிகம் உள்ள கிணத்துக்கடவு மற்றும் ஒத்தக்கால்மண்டபம் ஆகிய பகுதிகளில், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு பகுதியில் மட்டும் குறுகலான ரோடு மற்றும் சாக்கடை தண்ணீர் ரோட்டில் வழிந்து ஓடும் பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. என்னதான் சரி செய்தாலும் தற்போது வரை நிரந்தர தீர்வு இல்லை.
இது குறித்து தொடர்ந்து புகார் வந்ததைத் தொடர்ந்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டதற்கு காரணங்கள் மட்டும் கூறுகின்றனர். டி.இ.எல்.சி., பள்ளியில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பேசிய போது, எங்களால் எந்தவித பிரச்னையும் ஏற்படாது. சர்வீஸ் ரோட்டில் அகலப்படுத்த நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
மீண்டும் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட போது, மற்ற துறை சார்ந்த அதிகாரிகளிடம் இருந்து முறையான திட்டமதிப்பீடு வர வேண்டி உள்ளது. இந்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றவுடன், டெண்டர் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இவ்வாறு, பல காரணங்கள் சொல்லி, கடந்த மூன்றாண்டுகளாக இந்த சர்வீஸ் ரோடு பணியை முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். விரைவில் சர்வீஸ் ரோட்டை சரி செய்யாவிட்டால், பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, கூறினார்.

