/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 ஜோடிகளுக்கு திருமணம் பதிவு செய்ய அழைப்பு
/
30 ஜோடிகளுக்கு திருமணம் பதிவு செய்ய அழைப்பு
ADDED : அக் 01, 2024 11:12 PM
பொள்ளாச்சி : ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவை மண்டலத்தை பொறுத்தமட்டில், 30 ஜோடியினருக்கு, திருமணம் நடத்தி வைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு மண்டலத்திலும் முக்கிய கோவில்களில் சீர்வரிசை பொருட்களுடன், ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
அதன்படி, 2024 -- 25ம் ஆண்டுக்கு, மணமக்கள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தை பொறுத்தமட்டில், 30 ஜோடியினருக்கு இலவச திருமணம் நடக்கிறது. கோவை மருதமலை முருகன்கோவில் மற்றும் பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலில் திருமணம் நடத்தி வைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மணமக்களுக்கு, 4 கிராம் எடையில் தங்க திருமாங்கல்யம், மணமக்கள் ஆடை, மணமக்கள் வீட்டினர், 20 பேருக்கு அறுசுவை விருந்து, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, பாத்திரங்கள் என, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும்.
இலவச திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக, திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், 72 ஆயிரத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்களாகவும், ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும், முதல் திருமணம் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். வரும், 21ல், திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.