/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு -- பர்லியார் இடையே 3.5 கி.மீ., மலையேற்ற சுற்றுலா!; பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு
/
கல்லாறு -- பர்லியார் இடையே 3.5 கி.மீ., மலையேற்ற சுற்றுலா!; பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு
கல்லாறு -- பர்லியார் இடையே 3.5 கி.மீ., மலையேற்ற சுற்றுலா!; பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு
கல்லாறு -- பர்லியார் இடையே 3.5 கி.மீ., மலையேற்ற சுற்றுலா!; பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு
ADDED : டிச 09, 2024 06:26 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், கல்லாறு - பர்லியார் இடையே 3.5 கி.மீ., அடர் வனப்பகுதியில், சுற்றுலா பயணியர் மலையேற்றம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே மாதத்தில் 150 பேர் மலையேற்றம் செய்துள்ளனர். இத்திட்டத்தால் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாறு, பர்லியார் இடையே மலையேற்றம் திட்டம் கடந்த நவ., 1 முதல் துவங்கியது.
மேட்டுப்பாளையம் வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி மலைகள் உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள், இங்கு உள்ளன. இப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி என, பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
மலைப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீர், வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள மழை நீர் போன்றவை, மரங்கள் மற்றும் வனவிலங்குகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன.மலையேற்றம் செல்லும்போது சுற்றுலா பயணியர் நீரோடைகளுக்கு தாகம் தீர்க்க வரும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். இதனால் இத்திட்டம் சுற்றுலா பயணியர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு
மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:
மலையேற்ற வழிகாட்டிகளாக நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் என, கல்லாறை சேர்ந்த பழங்குடியின மக்கள் எட்டு பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டியாகவும், பறவை காணுதல், முதலுதவி சிகிச்சை அளித்தல், உணவு தயாரித்து வழங்குதல் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லார் - பர்லியார் இடையே 3.5 கி.மீ., தூரம் மலையேற்றம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இணையத்தில் பதிவு செய்து தான் வரவேண்டும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது.
மலையேற்றம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணியருக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. உரிய பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த நவ., 1 முதல் தற்போது வரை 150க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் மேற்கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு மிகவும் புது அனுபவமாக அமைந்துள்ளது. அதே நேரம், பழங்குடியின மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.--