/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம் 3.60 லட்சம்! ஊராட்சிகளை பசுமையாக்க முயற்சி
/
மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம் 3.60 லட்சம்! ஊராட்சிகளை பசுமையாக்க முயற்சி
மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம் 3.60 லட்சம்! ஊராட்சிகளை பசுமையாக்க முயற்சி
மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம் 3.60 லட்சம்! ஊராட்சிகளை பசுமையாக்க முயற்சி
ADDED : அக் 27, 2025 09:56 PM
பொள்ளாச்சி: ஊராட்சிகள் தோறும் பசுமையும், குளுமையும் அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணியை, ஊரக வளர்ச்சித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஊராட்சிகளில் மழை காலத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மூன்று ஒன்றியங்களுக்கான மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய பொள்ளாச்சி அருகே வெள்ளாளபாளையம் ஊராட்சியில் நர்சரி துவக்கப்பட்டுள்ளது. இங்கு, வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லி, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும், தலா ஒரு ஒன்றியத்திற்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, கிராமங்கள் தோறும் உள்ள வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், நீர்நிலை ஒட்டிய பகுதிகளில் நடவு செய்யப்படவும் உள்ளது.
மரக்கன்று பராமரிப்பில், வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மட்டுமின்றி, தன்னார்வ அமைப்பினரையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த குடியிருப்பு பகுதி மக்கள், கல்வி நிறுவனங்கள் வாயிலாகவும் மரக்கன்றுகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறையினர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், 32 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில், 3 லட்சத்து, 60 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கிராமங்கள்தோறும், பசுமையை ஏற்படுத்தும் நோக்கில், மரக்கன்று வளர்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளால் செய்யப்படவும் உள்ளது. அவர்களுக்கு, அந்தந்த ஊராட்சியில் இருந்து, கூலி வழங்கப்படும்.
மரக்கன்றுகளை, அந்தந்த பகுதிகளில் நடவு செய்தபின், அதன் வளரும் தன்மையை பொறுத்து, பராமரிப்பு மேற்கொள்ளப்படும். இதன்காரணமாக, வருங்காலத்தில் கிராமங்கள்தோறும் பசுமையும், குளுமையும் அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

