ADDED : பிப் 02, 2026 05:21 AM
கோவை: கோவை மாவட்ட தொழுநோய் ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவின் கீழ், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் 38 பேர் தொழுநோய் பாதிப்புடன் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மாவட்ட தொழுநோய் ஒழிப்பு பிரிவின் கீழ், கடந்த ஜன., 19ம் தேதி முதல் இரண்டாம் கட்ட தொழுநோய் கண்காணிப்பு பணி, மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.
கோவை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறியதாவது:
இரண்டாம் கட்ட கண்காணிப்பு பணியில், 2400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 38 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது.
தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும். இப்பாதிப்பு குறித்து அச்சம், தயக்கம் தேவையில்லை. கண்காணிப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
