/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராத 4 நகர மேம்பாட்டு ஆணையங்கள்! அசராமல் வருகின்றன அரசாணைகள் மட்டும்
/
நகராத 4 நகர மேம்பாட்டு ஆணையங்கள்! அசராமல் வருகின்றன அரசாணைகள் மட்டும்
நகராத 4 நகர மேம்பாட்டு ஆணையங்கள்! அசராமல் வருகின்றன அரசாணைகள் மட்டும்
நகராத 4 நகர மேம்பாட்டு ஆணையங்கள்! அசராமல் வருகின்றன அரசாணைகள் மட்டும்
ADDED : பிப் 15, 2024 09:14 PM
கோவை, திருப்பூர் உள்ளிட்ட நான்கு நகரங்களுக்கு, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டு, மூன்றாண்டுகளாகியும் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது, நகர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சியைத் திட்டமிடுவதற்காகவே, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உருவாக்கப்பட்டது.
அதன்கீழ் செயல்படும் நகர ஊரமைப்பு இயக்குனரகம், நகரங்களுக்கு 'மாஸ்டர் பிளான்' உருவாக்கும் பொறுப்பில் உள்ளது.
ஆனால் அந்தத் துறை, அதற்கான வேலைகளைச் செய்யாமல், லே-அவுட், கட்டடங்களுக்கு திட்ட அனுமதி தருவதில், பணம் பண்ணும் துறையாகவே மாறிவிட்டது.
அதனால் தான், ஒவ்வொரு நகருக்குமான 'மாஸ்டர் பிளான்' புதுப்பிப்பு, ஆண்டுக்கணக்கில் தாமதமாகி வருகிறது. அதில் இடம் பெறும் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் காகித வடிவிலேயே உள்ளன.
இதை உணர்ந்தே, தலைநகரான சென்னையின் வளர்ச்சிக்காக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டது. அதனால், அங்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இதேபோன்ற வளர்ச்சியை மற்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் ஏற்படுத்தும் முயற்சியாகத்தான், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களுக்கு, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஏற்படுத்துவதற்கு, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
2021 நவம்பரில் இருந்து, 2022 ஜனவரி வரையிலும், இதற்காக பல்வேறு அரசாணைகளும் வெளியிடப்பட்டன.
ஒவ்வொரு நகர மேம்பாட்டு ஆணையத்துக்கும் (U.D.A.-Urban Development Authority) பகுதிகளை நிர்ணயித்தும், தனியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
வந்தார்...சென்றார்!
கோவை நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு, அலர்மேல்மங்கை என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டார். அதற்குப் பின், எந்த வேலையும் நடக்கவில்லை. சில மாதங்களில் அவரும் மாற்றப்பட்டார்; வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், லே-அவுட், கட்டடங்களுக்கான திட்ட அனுமதி எளிதாகும். புதிய வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்படும்.
ஆனால் மூன்றாண்டுகளாக, இந்த ஆணையங்கள் குறித்த அறிவிப்பு, அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை.
மாஸ்டர் பிளான்
இதற்கிடையில், கோவை உள்ளிட்ட சில நகரங்களுக்கான, 'மாஸ்டர் பிளான்' வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், அவை நடைமுறைக்கு வரும். அப்படி வரும்போது, அதிலுள்ள திட்டங்களை, எந்தத் துறை செயல்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.
நகர மேம்பாட்டு ஆணையம் குறித்த அரசாணை, வெறும் காகிதத்திலேயே இருப்பது, இந்த நகரங்களில் வசிக்கும் பல கோடி மக்களிடம் குறிப்பாக, தொழில் அமைப்பினரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நகர ஊரமைப்பு இயக்குனர் கணேசன் கூறுகையில், ''மொத்தம் ஆறு நகரங்களில் நகர மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளைப் பின்பற்றி, நகர மேம்பாட்டு ஆணைய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வாரத்தில், அது அரசுக்கு அனுப்பப்படும்; சட்டத்துறையின் ஒப்புதல் பெற்றபின், ஆணையங்களுக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுவர்; மிக விரைவில் இந்த ஆணையங்கள் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.
அரசாணையை வேகவேகமாக வெளியிடும் தமிழக அரசு, அதை செயல்படுத்துவதில் மட்டும் இப்படி சுணக்கம் காண்பிப்பது ஏனோ?
-நமது சிறப்பு நிருபர்-