/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து இழப்பீடு வழங்காததால் ஒரே நேரத்தில் 4 அரசு பஸ் ஜப்தி
/
விபத்து இழப்பீடு வழங்காததால் ஒரே நேரத்தில் 4 அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் ஒரே நேரத்தில் 4 அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் ஒரே நேரத்தில் 4 அரசு பஸ் ஜப்தி
ADDED : மார் 20, 2024 12:46 AM

கோவை;விபத்தில் காயமடைந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்காததால், ஒரே நேரத்தில் நான்கு அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற அரசு பஸ்சும், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சும், காரமடை மெட்ரோ பள்ளி அருகில் 2019, டிச., 24ல் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்களில் காரமடை பெல்லாதி பகுதியை சேர்ந்த காவேரி அம்மாள், சுசீலா, கண்ணம்மாள், சண்முகப்பிரியா ஆகியோர் இழப்பீடு வழங்க கோரி, கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில், தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிமன்றம், நான்கு பேருக்கும், மொத்தம் ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்க, 2022 செப்., 15ல் உத்தரவிட்டது.
கோவை அரசு போக்குவரத்துக்கழகம் பணம் வழங்காததால், வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டு தொகை அதிகரித்தது. இதனால், அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கோவை - சேலம் செல்லும் நான்கு அரசு பஸ்கள், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற போது, கோர்ட் ஊழியர்கள் நேற்று, ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
நான்கு பஸ்களும் கோர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டதால், மற்ற வாகனங்கள் நிறுத்த இடமின்றி நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்களை திருப்ப முடியாமலும், வெளியே எடுத்து செல்ல முடியாமலும் வக்கீல்கள், பொதுமக்கள் திணறினர்.

