
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி, சின்னேரிபாளையம், கணேசபுரம் - வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கென்னா மெக்னஸ் 50, ரீடா அவினவோ 43, பிடிலிஸ் ஒனிரீக லோ 46 மற்றும் ஈச்சுக்வு ஜான் 40 ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தினார். அதில் பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியான பின்பும் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரிய வந்தது. நான்கு பேரையும் கைது செய்த அவிநாசி போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறைக்கு அனுப்பினர்.

