ADDED : ஜூலை 31, 2025 10:13 PM

தொண்டாமுத்தூர்; ராமசெட்டிபாளையத்தில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த கார் உட்பட, 4 வாகனங்கள் எரிந்து நாசமானது.
ராமசெட்டிபாளையம், கூட்டுறவு நகரை சேர்ந்தவர் சுஜித்,39, குமுளியில் உள்ள தனியார் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் வீட்டின் முன்புறம், ஒரு கார், பைக், 2 இருசக்கர வாகனம் என, மொத்தம் நான்கு வாகனங்கள் உள்ளது.
இதில், ஒரு இருசக்கர வாகனம் பேட்டரி வாகனமாகும். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, சுஜித் குமார், குடும்பத்துடன் தூங்கி கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டிலிருப்பவர், சுஜித் குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சுஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தார் வெளியே வந்து, பேட்டரி வாகனத்தில் பற்றி இருந்த தீயை அணைக்க முயன்றனர். அதற்குள், தீ அருகிலிருந்த கார், பைக், ஆகியவற்றிற்கு பரவியது. உடனடியாக, கோவை புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இத்தீ விபத்தில், 4 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.